ஈரோட்டில் பிளஸ்-2 மறுதேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஆசிரியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
ஈரோட்டில், பிளஸ்-2 மறுதேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
ஈரோடு,
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்வினை, கொரோனா ஊரடங்கினால் ஈரோடு மாவட்டத்தில் 1,002 மாணவ-மாணவிகள் எழுதவில்லை. தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் கடந்த 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை அந்தந்த பள்ளிக்கூடங்களிலும், இணையதளம் மூலமாகவும் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 30 மாணவ-மாணவிகள் விருப்பம் தெரிவித்து இருந்தனர். மேலும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் ஈரோடு மாவட்டத்தில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து இருந்தார். இவர்களுக்கு நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 13 மையங்களில் தேர்வு நடந்தது. இதில் 26 மாணவ -மாணவிகள் தேர்வு எழுதினார்கள். 5 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள் ஈரோடு இந்து கல்வி நிலைய பள்ளிக்கூடத்துக்கு பத்திரமாக கொண்டு செல்லப்பட்டது.
பரிசோதனை
இந்த நிலையில் பிளஸ்-2 மறுதேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்று நடந்தது. இந்த பணிக்காக 6 ஆசிரிய -ஆசிரியைகள் வந்திருந்தனர். முன்னதாக இவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் ஆசிரியர்கள் சானிடைசர் மூலம் தங்களது கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். விடைத்தாள்கள் திருத்தும் பணியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி பார்வையிட்டார். விடைத்தாள்கள் திருத்தும் பணி நேற்றே நிறைவடைந்தது.
Related Tags :
Next Story