மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 24 மி.மீ. மழை பதிவு
சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 24 மில்லி மீட்டர் மழை பதிவானது.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு சுமார் 9.30 மணி அளவில் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் அம்மாபேட்டை, சூரமங்கலம், கிச்சிபாளையம், சீலநாயக்கன்பட்டி, அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் சாலையோரங்களில் சாக்கடை கால்வாய் கழிவு நீருடன் மழை நீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் மாவட்டத்தில் ஏற்காடு, ஆத்தூர், ஓமலூர், காடையாம்பட்டி, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 24 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மற்ற இடங்களில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ஓமலூர் - 18.6, சேலம்-12.3, ஆணைமலை-12, தம்மம்பட்டி-10, காடையாம்பட்டி-8.4, ஆத்தூர்-3.4, கரியகோவில்-3, சங்ககிரி-1.3, எடப்பாடி-1.
இதனிடையே நேற்று இரவிலும் சேலத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 8 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை 1 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதே போல ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதியிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் ஒரு சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
Related Tags :
Next Story