கிருஷ்ணகிரியில் கொரோனா சிறப்பு வார்டில் போதிய வசதிகள் இல்லையா? சமூக வலைதளத்தில் வந்த வீடியோவால் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா சிறப்பு வார்டில் போதிய வசதி இல்லை என சமூக வலைதளத்தில் வந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டிலும், ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும் அனுமதிக்கப்படுகின்றனர். அறிகுறி இல்லாமல் இருப்பவர்கள், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு பெண்கள் வார்டில் போதிய வசதிகள் இல்லாமலும், தூய்மை பணிகள் மேற்கொள்வதில்லை என அங்கு அனுமதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து வீடியோக்களை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்.
எந்த குறைபாடுகளும் இல்லை
அதில், இரவு உணவு மாலை 6.30 மணிக்கே வழங்கப்பட்டு வருவதாகவும், தூய்மை பணிகள் மேற்கொள்வதில்லை. குடிப்பதற்கு வெந்நீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரவில்லை மற்றும் குப்பைகள் அகற்றப்படுவதில்லை எனவும் வேதனையுடன் தெரிவித்தனர். இதே போல் பர்கூரில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டில் உள்ளவர்கள் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர். இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரமசிவன் கூறும் போது, ‘கொரோனா வார்டில் அப்படி எந்த குறைபாடுகளும் இல்லை. அனைவருக்கும் முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சரியான சிகிச்சை அளிக்கவில்லை என புகார் இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
Related Tags :
Next Story