திருவாரூர் மாவட்டத்தில், நிலத்தடி நீரை மேம்படுத்த ரூ.11¾ கோடியில், செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி தலைமை பொறியாளர் ஆய்வு
திருவாரூர் மாவட்டத் தில், நிலத்தடி நீரை மேம்படுத்த ரூ.11¾ கோடியில், செயற்கை முறை செறிவூட்டும் திட்டத்தின் கீழ் கிணறுகள்-துளைகள் அமைக்கும் பணிகளை தலைமை பொறியாளர் பிரபாகரன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மேம்பாட்டிற்காக பொதுப்பணித்துறையின் மூலம் செயற்கை முறை செறிவூட்டும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் காவிரி, வெண்ணாறு உபவடிநில பகுதிகளில் உள்ள ஆறுகள், வடிகால்களில் 155 செறிவூட்டும் துளைகள் அமைப்பதற்கும் நீடாமங்கலம், மன்னார்குடி மற்றும் கோட்டூர் வட்டங்களில் உள்ள வெண்ணாறு உபவடிநிலத்தை சேர்ந்த 24 முறை சார்ந்த ஏரிகளில் செறிவூட்டும் கிணறுகள் அமைப்பதற்கும் தமிழக முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு ரூ.11 கோடியே 73 லட்சத்து 93 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தஞ்சை நிலநீர் கோட்டத்தின் மூலம் இந்த பணிகள் கடந்த மே மாதம் தொடக்கத்தில் இருந்து நடந்து வருகிறது.
தலைமை பொறியாளர் ஆய்வு
இந்த பணிகளை சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மைய தலைமை பொறியாளர் பிரபாகரன் ஆய்வு செய்தார். டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் ஆறுகளில் நடந்து வந்த செறிவூட்டும் துளைகள் முடிக்கப்பட்ட நிலையில், ஏரிகளில் உள்ள செறிவூட்டும் கிணறு கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்கு உட்பட்ட ஆலங்கோட்டை மற்றும் கூப்பாச்சிக்கோட்டை கிராமங்களில் உள்ள ஏரிகளில் நடந்து வரும் பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், பணிகளை எந்தவித தடையுமின்றி மேற்கொள்வதுடன் விரைவாகவும் அதே சமயம் செம்மையாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது தஞ்சை நிலநீர் கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் வரதராஜன், உதவி பொறியாளர்கள் ரமாபிரபா, லெஷ்மிபிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story