கொரோனா நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கொரோனா நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்கக்கோரி   விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 July 2020 11:27 AM IST (Updated: 29 July 2020 11:27 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம், 

நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் ஜீவாராமன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாகை ஒன்றியச் செயலாளர் பகு முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.

கொரோனா தொற்று காலம் முழுமைக்கும் விவசாய தொழிலாளர்கள் குடும்பத்திற்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 நிவாரணம் வழங்க வேண்டும். நுண் நிதி நிறுவன கடன்களை அரசே ஏற்று தள்ளுபடி செய்ய வேண்டும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க வேண்டும்.

60 வயது நிறைவடைந்த முதியோர் அனைவருக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சந்திரசேகர் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஜெயராமன். விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் மீரா, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்

இதேபோல் வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவி.சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வெற்றியழகன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திருக்குவளை

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கீழையூர் ஒன்றியம் திருக்குவளை தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். தலைஞாயிறு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் என்.முருகையன், கீழையூர் ஒன்றிய தலைவர் ஏ.முருகையன், பொருளாளர் தெட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும் ,முன்னாள் எம்.எல்.ஏ. வுமான நாகைமாலி கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கி உரை ஆற்றினார் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முருகையன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொறையாறு

பொறையாறில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் காபிரியேல், விவசாய சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ், விவசாய சங்க வட்ட செயலாளர் ராசையன் ஆகியோர் பேசினர்.

Next Story