பெரம்பலூரில் மேலும் 25 பேருக்கு கொரோனா அரியலூரில் 17 பேர் பாதிப்பு


பெரம்பலூரில் மேலும் 25 பேருக்கு கொரோனா அரியலூரில் 17 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 29 July 2020 6:32 AM GMT (Updated: 29 July 2020 6:32 AM GMT)

பெரம்பலூரில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அரியலூரில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த ஒரு தாய், மகள் உள்பட 6 பேருக்கும், லெப்பைக்குடிகாடு, கீழப்புலியூர், காருக்குடி, விஜயகோபாலபுரம், அடைக்கம்பட்டி, பூலாம்பாடி, வேப்பந்தட்டை, லாடபுரம், அல்லிநகரம், நெய்குப்பை, மேலப்புலியூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 19 பேர் என மொத்தம் 25 பேருக்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடியிருப்பு பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 235 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 4 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 129 பேர் பெரம்பலூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்ட அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரியலூரில் 17 பேர்

அரியலூரில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அதனை பொதுமக்கள் கடைப்பிடிக்காமல் அலட்சியபோக்குடன் காணப்படுகின்றனர். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது, முககவசம் அணியாமல் இருப்பது என காணப்படுவதால், அரியலூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி திருமானூரை சேர்ந்த 51 வயதுடைய பெண், உடையார்பாளையத்தை சேர்ந்த 49 வயதுடைய ஆண், ஜெயங்கொண்டத்தை சேர்ந்த 32 வயதுடை பெண், அரியலூரை சேர்ந்த 50 வயதுடைய ஆண், 45 வயதுடைய பெண் என மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மொத்தம் 17 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை செய்து தனிமை படுத்தியுள்ளனர். தொடர்ந்து கொரோனா பாதித்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 730 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதம் உள்ளவர்கள் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், விருத்தாச்சலம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருவதால் அரியலூர் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Next Story