கூட்டணி அரசை கவிழ்க்க முடியாததால் பா.ஜனதா குழப்பத்தில் உள்ளது சிவசேனா தாக்கு


கூட்டணி அரசை கவிழ்க்க முடியாததால் பா.ஜனதா குழப்பத்தில் உள்ளது சிவசேனா தாக்கு
x
தினத்தந்தி 29 July 2020 9:34 PM GMT (Updated: 29 July 2020 9:34 PM GMT)

மராட்டியத்தில் தனது தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்க்க முடியாததால் பாரதீய ஜனதா குழப்பத்தில் உள்ளதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டிய பாரதீய ஜனதா செயற்குழு கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மராட்டியத்தில் பாரதீய ஜனதா சொந்த பலத்தில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். இந்தநிலையில், செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த மாநில பாரதீய ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மாநில நலனை பாதுகாப்பதற்காக சிவசேனாவுடன் பாரதீய ஜனதா கூட்டணி வைத்தாலும், தேர்தலில் கூட்டணியாக போட்டியிட மாட்டோம் என்று கூறினார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவசேனாவுடன் கூட்டணி சேர எந்த திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் பட்னாவிஸ் தெரிவித்தார்.

பாரதீய ஜனதா தலைவர்களின் இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்து சிவசேனா விமர்சித்து உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

பா.ஜனதா குழப்பம்

மராட்டியத்தில் உங்கள் அரசியல் விளையாட்டை விளையாட முடியாது. எனவே மாநிலத்தில் உங்களது ஆட்சியை பற்றி ஆசைப்படவும் முடியாது. ஜே.பி.நட்டா மாநில பாரதீய ஜனதா சொந்த பலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் சந்திரகாந்த் பாட்டீல், மாநில நன்மைக்காக சிவசேனாவுடன் கைகோர்க்க பாரதீய ஜனதா தயாராக உள்ளது என்று குழந்தைத்தனமாக அறிக்கையை வெளியிடுகிறார்.

சில பாரதீய ஜனதா தலைவர்கள் சிவசேனாவை விமர்சிக்கும் போது, அந்த கட்சியுடன் சிவசேனா இணைவதன் மூலம் மாநிலத்திற்கு எவ்வாறு நன்மைகளை வழங்க முடியும்?

சிவசேனா தலைமையிலான தற்போதைய மகா விகாஷ் அகாடி அரசாங்கம் இந்த மாநிலத்தின் நலனுக்காக செயல்படுகிறது. இந்த அரசாங்கத்தை குதிரை பேரம் மூலம் கவிழ்க்க முடியாது என்பதால் பாரதீய ஜனதா குழப்பம் அடைந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story