புதுவையில் ஒரே நாளில் புதிய உச்சமாக 166 பேருக்கு கொரோனா


புதுவையில் ஒரே நாளில் புதிய உச்சமாக 166 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 29 July 2020 10:25 PM GMT (Updated: 29 July 2020 10:25 PM GMT)

புதுவையில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 166 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி,

உலகையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவிலும் புகுந்து வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் முதல் 50 நாட்கள் வரை ஒற்றை இலக்கத்திலேயே தொற்று பாதிப்பு இருந்து வந்தது. பல்வேறு தளர்வுகளுடன் 5-ம்கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்தநிலையில் தொற்று கண்டறியும் சோதனையையும் அரசு அதிகப்படுத்தியது. இந்த வகையில் மாநிலத்தில் நேற்று முன்தினம் 837 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிய உச்சமாக ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 106 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியிலும், 45 பேர் ஜிப்மரிலும், 3 பேர் கோவிட் கேர் சென்டரிலும், 12 பேர் காரைக்காலிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் இதுவரை 3,171 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 47 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள னர். 1,869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 87 பேர் குணமடைந்து உள்ளனர். கதிர்காமம் மருத்துவக்கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 51 பேர் கோவிட் கேர் சென்டருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1,112 பேருக்கு சிகிச்சை

தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 454 பேர், ஜிப்மரில் 333 பேர், கோவிட் கேர் சென்டரில் 240 பேர், காரைக்காலில் 36 பேர், ஏனாமில் 47 பேர், மாகியில் ஒருவர், தமிழக பகுதியில் ஒருவர் என மொத்தம் 1,112 தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 132 பேர், ஏனாமில் 11 பேர் என 143 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 37,162 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 33,369 பேருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. 421 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது. 

Next Story