மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 30 July 2020 12:06 AM GMT (Updated: 30 July 2020 12:06 AM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக செங்கோட்டை குண்டாறு அணை நிரம்பியது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கோட்டை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கண்ணுப்புளிமெட்டு பகுதியில் குண்டாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் உயரம் 36.10 அடியாகும்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக குண்டாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் குண்டாறு அணை நிரம்பி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேறுகிறது. இந்த அணையின் மூலம் நேரடியாக 742 ஏக்கரும், மறைமுகமாக 392 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. குண்டாறு அணை நிரம்பி வழிவதால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணை நிரம்பி வழிவதை பார்க்கும்போது மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

குற்றாலம் சீசனையொட்டி சுற்றுலா பயணிகள், குண்டாறு அணைக்கும் வந்து செல்வார்கள். ஆனால் தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையால் குண்டாறு அணைப்பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி அமைதியாக காணப்படுகிறது.

Next Story