வனத்துறையினர் தாக்கியதில் இறந்ததாக வழக்கு: கடையம் விவசாயி உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்தன


வனத்துறையினர் தாக்கியதில் இறந்ததாக வழக்கு: கடையம் விவசாயி உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்தன
x
தினத்தந்தி 30 July 2020 12:11 AM GMT (Updated: 30 July 2020 12:11 AM GMT)

வனத்துறையினர் தாக்கியதில் இறந்ததாக கூறப்படும் கடையம் விவசாயியின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை கூறுகிறது என மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்துள்ளார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த பாலம்மாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது கணவர் அணைக்கரைமுத்து. விவசாயி. கடந்த 22-ந்தேதி எங்கள் வீட்டுக்கு வந்த வனத்துறையினர், எனது கணவரை விசாரணைக்காக தங்களின் சிவசைலம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு எனது கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். வனத்துறையினர் தாக்கியதால் தான் அவர் இறந்துள்ளார். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கை

இந்த வழக்கை நேற்றுமுன்தினம் விசாரித்த ஐகோர்ட்டு, அணைக்கரைமுத்துவின் உடலை அவசரம், அவசரமாக பரிசோதனை செய்தது ஏன் என கேள்வி எழுப்பியது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை, வீடியோ பதிவு ஆகியவற்றை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அணைக்கரைமுத்து உடல் பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் மனுதாரர் தரப்பு வக்கீல் ஆஜராகி, “அணைக்கரைமுத்துவின் உடலில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்ததாக கூறி, மனுதாரரிடம் அம்பை மாஜிஸ்திரேட்டு கையெழுத்து பெற்றுள்ளார்“ என தெரிவித்தார்.

4 இடங்களில் காயம்

ஆனால் நீதிபதி, “விவசாயி அணைக்கரைமுத்துவின் உடலில் 4 இடங்களில் காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது“ என தெரிவித்தார்.

மேலும் இறுதி உத்தரவுக்காக இந்த வழக்கு நாளை (அதாவது இன்று) ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.

7-வது நாளாக போராட்டம்

இதற்கிடையே, அணைக் கரை முத்துவின் உடலை வாங்க மறுத்து நேற்று 7-வது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அணைக்கரை முத்து வீட்டு முன்பு அவர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்கள். அப்போது அங்கு வந்த தே.மு.தி.க. கட்சியினர், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

Next Story