பேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை பத்தலப்பல்லி மலைப்பாதையில் ‘திடீர்’ நிலச்சரிவு ஆந்திரா, கர்நாடகா மாநில போக்குவரத்து துண்டிப்பு


பேரணாம்பட்டு பகுதியில் பலத்த மழை பத்தலப்பல்லி மலைப்பாதையில் ‘திடீர்’ நிலச்சரிவு ஆந்திரா, கர்நாடகா மாநில போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 30 July 2020 6:12 AM IST (Updated: 30 July 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பத்தலப்பல்லி மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஆந்திரா, கர்நாடகா மாநில போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தமிழக எல்லையில் அமைந்துள்ளது பத்தலப்பல்லி மலைக்கிராமம். தமிழக எல்லையான பத்தலப்பல்லி கிராமத்தையொட்டி ஆந்திர எல்லை உள்ளது. பத்தலப்பல்லி மலைப்பாதையில் 7 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையினால் மலைப்பகுதியிலிருந்து சிறிய பாறை சரிந்து மலைப்பாதையில் உருண்டு விழுந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை பேரணாம்பட்டு மற்றும் பத்தலப்பல்லி பகுதியில் சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த பலத்த மழையின் காரணமாக 7-வது கொண்டை ஊசி வளைவான குண்டன் கானாறு என்ற இடத்தில் சுமார் 30 மீட்டர் நீள தூரத்திற்கு திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.

போக்குவரத்து துண்டிப்பு

இதனால் பத்தலபல்லி வழியாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதே போன்று ஆந்திர மாநில எல்லையான நாய்க்கனேரி சோதனைச்சாவடியிலும் தமிழக எல்லைக்குள் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நிலச்சரிவு காரணமாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பேரணாம்பட்டு பகுதிக்கு காய்கறிகள், பூக்கள், பழங்கள் விற்பனைக்கு வருவது முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இதுதொடர்பாக கலெக்டர் சண்முகசுந்தரம் கூறுகையில், இந்த சாலை வழியாக தினமும் பல வாகனங்கள் காய்கறிகள் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு செல்வது வழக்கம். இந்த மண் சரிவை அப்புறப்படுத்த தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இது சரி செய்ய ஒரு வாரமாகும் என்பதால், இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பலமனேர், சித்தூர் வழியாக சென்னை அல்லது பெங்களூருக்கு செல்லலாம் என்றார்.

Next Story