ஏர்வாடி தர்கா அருகே 16-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு


ஏர்வாடி தர்கா அருகே   16-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 30 July 2020 9:27 AM IST (Updated: 30 July 2020 9:27 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே 16-ம் நூற்றாண்டை சேர்ந்த தமிழ் மற்றும் அரபி எழுத்துகள் உள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறை கஞ்சிப்பள்ளி பகுதியில் உள்ள தோப்பில் ஒரு கல்வெட்டு இருப்பதாக முத்தரையர் நகர் செல்லம் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு அங்கு சென்று பார்வையிட்டார்.

பின்பு அந்த கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்த அவர் இதுபற்றி கூறியதாவது:- ஏர்வாடி தர்கா அருகே ஏரான்துறையில் உள்ள தோப்பில் 6½ அடி உயரம் 1½ அடி அகலம் உள்ள ஒரு கடற்கரை பாறையால் ஆன ஒரு தூண் உள்ளது. இதன் இருபக்கமும் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு பக்கத்தில் தமிழ் கல்வெட்டும், மறுபக்கத்தில் பெரிய அளவிலான சில அரபி எழுத்துகளும் குடுவை போன்ற ஒரு குறியீடும் உள்ளன. அரபி எழுத்துகள் உள்ள தூணின் பின்பகுதி மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.

20 வரிகள் கொண்ட தமிழ் கல்வெட்டில் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளதால் அதுபற்றிய முழுமையான தகவல்களை அறிய முடியவில்லை. எனினும் இதில் உள்ள நாயகத்து போன்ற சில சொற்கள் மூலம் இந்த கல்வெட்டு ஏர்வாடியில் உள்ள செய்யது இபுராகிம் பாதுஷா நாயகம் தர்காவுக்கு நிலதானம் வழங்கப்பட்டதாக இருக்கும் என ஊகிக்கலாம். தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் அளவுகள் இதில் சொல்லப்பட்டுள்ளது.

கோல் அளவுகள்

இதில் முப்பத்தாறரை, பதிமூன்று ஆகிய கோல் அளவுகள் சொல்லப்பட்டுள்ளன. துல்லியமான அரைக்கோல் அளவும் இதில் கூறப்பட்டுள்ளது. எண்களை எழுத்தால் எழுதியுள்ளனர். எண் குறியீடுகள் பயன்படுத்தப்படவில்லை. பொதுவாக 1 கோல் என்பது 16 சாண் அளவுகள் ஆகும். பிற்கால பாண்டியர் ஆட்சிக்காலத்தில் சுந்தரபாண்டியன் கோல், வீரபாண்டியன் கோல் போன்ற கோல் அளவுகள் வழக்கில் இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story