அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில் அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்காத தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல்,
கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா அறிகுறி
கொரோனா நோய் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை வழங்குவதற்காக, தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வருகின்ற நோயாளிகளுக்்கு நோய் தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டால், அவர்களின் விவரங்களை உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கோ, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ, அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 1077 அல்லது 8220402437 என்ற செல்போன் எண்ணுக்கோ உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
மேலும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் சுகாதாரத்துறை அலுவலர்களால் தொடர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வுகளில் சில கிளினிக்குகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் வருகை தரும் நோயாளிகளின் விவரங்களை பதிவேடுகளில் பதிவு செய்யாதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது மற்றும் கிருமிநாசினி கொண்டு தொற்று நீக்கம் செய்யப்படாததும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் அரசின் வழிகாட்டுதல்களை கடை பிடிக்காத தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே காய்ச்சல், சளி, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story