தர்மபுரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை: பலமனேரி-ஜம்புத்து இடையே தார்சாலை துண்டிப்பு கிராமமக்கள் அவதி


தர்மபுரி மாவட்டத்தில் விடிய, விடிய மழை:  பலமனேரி-ஜம்புத்து இடையே தார்சாலை துண்டிப்பு   கிராமமக்கள் அவதி
x
தினத்தந்தி 30 July 2020 10:48 AM IST (Updated: 30 July 2020 10:48 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் விடிய, விடிய கனமழை பெய்தது. இதனால் பலமனேரி-ஜம்புத்து இடையே தார்சாலை துண்டிக்கப்பட்டதால் கிராமமக்கள் அவதிக்குள்ளாகினர்.

காரிமங்கலம், 

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தில் விடிய, விடிய பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக தர்மபுரியில் 55 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் பகுதி வாரியாக பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- பாலக்கோடு-41, மாரண்டஅள்ளி-21, ஒகேனக்கல்-8, பென்னாகரம்-22, பாப்பிரெட்டிப்பட்டி-32.2, அரூர்-28. மாவட்டம் முழுவதும் மொத்த மழையளவு 207.2 மி.மீ. ஆகும்.

தர்மபுரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த மழை காரணமாக நேற்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்தது. நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் பகலில் ஆங்காங்கே சில இடங்களில் லேசான பெய்தது. இந்த மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள், விவசாய கிணறுகளில் தண்ணீர் தேங்கியது. விவசாய நிலங்களிலும் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சாலை துண்டிப்பு

காரிமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. பலமனேரி பகுதியில் பெய்த மழையால் சிறு பாலத்தின் வழியாக அதிக அளவில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தார்சாலை, சிறுபாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக பலமனேரி-ஜம்புத்து இடையே தார்சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா, தண்டபாணி, ஊராட்சி மன்ற தலைவர் சத்தியவாணி இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சேதமடைந்த பாலம் மற்றும் தார்சாலையை பார்வையிட்டனர். அவர்கள் பொதுமக்கள் வந்து செல்ல சாலை யை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இப்பகுதியில் புதிய பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து துண்டிக்கப்பட்ட தார்சாலையை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

Next Story