நாகையில், 2-வது நாளாக மழை: வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன


நாகையில், 2-வது நாளாக மழை:  வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிப்பு  அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 30 July 2020 11:21 AM IST (Updated: 30 July 2020 11:21 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் 2-வது நாளாக மழை பெய்தது. இதனால் வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அதிகாலை 2 மணி முதல் பெய்ய தொடங்கிய மழையானது காலை 7 மணி வரை விட்டு விட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம்போல மழைநீர் தேங்கியது.

வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கோடியக்கரை, கடினல்வயல் பகுதிகளில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்களில் மழைநீர் சூழ்ந்து நின்றது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் உப்பு விலை உயர்ந்துள்ளது.

மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் உப்பள தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர். வேதாரண்யம் பகுதியில் மானாவாரி சம்பா சாகுபடி விவசாயிகள் தங்கள் நிலங்களில் மராமத்து பணிகளை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, தலைஞாயிறு, திட்டச்சேரி, மயிலாடுதுறை, கொள்ளிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

நெற்பயிர்கள் சாய்ந்தன

இதேபோல கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை 5 மணி நேரம் நீடித்தது. கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளான தேவூர், சாட்டியக்குடி, வலிவலம், கொளப்பாடு. கிள்ளுகுடி, வெண்மணி, இருக்கை, இலுப்பூர், குருக்கத்தி அத்திபுலியூர், கோகூர், ஆழியூர், சிக்கல், சங்கமங்கலம், ஒரத்தூர், ஆவராணி, புதுச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் மழை பெய்தது. மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

திருமருகல் ஒன்றிய பகுதிகளில் ஆயிரத்து 900 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக திருமருகல்,மருங்கூர், ஆலத்தூர் ,போலகம், பொறக்குடி,கணபதிபுரம், இடையாத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

நாகை 50.70, திருப்பூண்டி 98.40, தலைஞாயிறு 100.60, வேதாரண்யம் 70.40, மயிலாடுதுறை 28.40, சீர்காழி 47, கொள்ளிடம் 24, தரங்கம்பாடி 30, மணல்மேடு 46.

Next Story