திருச்சியில் விடிய, விடிய பெய்த மழை: சேறும், சகதியுமாக மாறிய ஜி கார்னர் தற்காலிக மார்க்கெட் வியாபாரிகள் கடும் அவதி


திருச்சியில் விடிய, விடிய பெய்த மழை:  சேறும், சகதியுமாக மாறிய ஜி கார்னர் தற்காலிக மார்க்கெட்  வியாபாரிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 30 July 2020 6:08 AM GMT (Updated: 30 July 2020 6:08 AM GMT)

திருச்சியில் விடிய, விடிய பெய்த மழையால் ஜி கார்னர் தற்காலிக காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

திருச்சி, 

திருச்சியில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பலத்த மழை இல்லை என்றாலும் விடிய, விடிய தூறிக்கொண்டே இருந்ததால் நகரில் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பொன்மலை ஜி கார்னரில் அமைக்கப்பட்டுள்ள காய்கறிகள் மொத்த வியாபாரத்திற்கான தற்காலிக மார்க்கெட் மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

பொதுவாக இந்த மார்க்கெட்டில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தான் வியாபாரம் மும்முரமாக நடப்பது வழக்கம். ஆனால் நேற்று முன்தினம் 12 மணிக்கு மேல் திடீரென பெய்த மழையால் வியாபாரிகளால் காய்கறிகளை மழையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

வியாபாரிகள் அவதி

அவர்கள் மழையில் நனைந்தபடியே வியாபாரம் செய்தனர். மழையால் மார்க்கெட் மைதானம் முழுவதும் சேறும், சகதியுமாக மாறியதால் லோடு ஏற்றிவந்த லாரிகள், வேன்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தன. சேதம் அடைந்த காய்கறிகளை வியாபாரிகள் அங்கேயே போட்டு விட்டுச்சென்றனர். இதுதொடர்பாக காந்திமார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் கமலக்கண்ணன் மாவட்ட கலெக்டருக்கு இணையதளம் மூலம் அனுப்பி உள்ள ஒரு கடிதத்தில் ‘வியாபாரிகள் ஒதுங்குவதற்கு கூட இடம் இல்லாததால் நனைந்துகொண்டே வியாபாரம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. வியாபார பணம், தராசு, கணக்கு எழுதும் நோட்டுகள் எல்லாம் மழையில் நனைந்து சேதமாகிவிட்டன. இதற்கெல்லாம் மேலாக மழையில் நனைந்த வியாபாரிகள் மற்றும் சுமைப்பணியாளர்களுக்கு சளி பிடித்து காய்ச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே காந்தி மார்க்கெட்டை திறக்க அனுமதிக்கவேண்டும். நேர கட்டுப்பாட்டுடன், சமூக இடைவெளியை பின்பற்றி நாங்கள் வியாபாரம் செய்ய தயாராக இருக்கிறோம்’ என கூறப்பட்டு இருந்தது.

Next Story