வேலூரில் கொரோனாவுக்கு 7 பேர் பலி


வேலூரில் கொரோனாவுக்கு 7 பேர் பலி
x
தினத்தந்தி 30 July 2020 10:04 PM IST (Updated: 30 July 2020 10:04 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் கொரோனாவுக்கு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர்,

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் விவரம் வருமாறு:-

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கில்லிரெட்டி ராஜன்நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 79). இவர் கொரோனா தொற்று சிகிச்சைக்காக கடந்த 20-ந்தேதி வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பிரவீன்குமாருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்தில் பலனின்றி உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் கோரமண்டல் கே.ஜி.எப். பகுதியை சேர்ந்தவர் நம்மாழ்வார் (75). இவர், கடந்த 27-ந்தேதி கொரோனா தொற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

மூதாட்டி பலி

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா பரதராமியை சேர்ந்தவர் கனி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (69). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 21-ந்தேதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 9 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் நேற்று காலை அவர் பலனின்றி உயிரிழந்தார்.

குடியாத்தத்தை சேர்ந்த 2 பேர் பலி

குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் புரேந்திரரெட்டி (70), ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி புரேந்திரரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

குடியாத்தம் டவுன் கண்ணகி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தனகோட்டி (60). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் தனகோட்டி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கர்நாடக, ஆந்திர மாநிலம் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 5 பேரின் உடல்களும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதியவர் தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (70). இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் வாலாஜா அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தசாமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு கொரோனா தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் கோவிந்தசாமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

பெண் தற்கொலை

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் மீரா (38). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் இறந்துபோன மீராவுக்கு கொரோனா தொற்று இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை

இதேபோல் திருவண்ணாமலை செட்டிகுளமேட்டு தெருவை சேர்ந்த 75 வயது முதியவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ரணி கொசப்பாளையம் பகுதியை சேர்ந்த 47 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Next Story