கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 30 July 2020 9:36 PM GMT (Updated: 30 July 2020 9:36 PM GMT)

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கால்நடை சந்தைகளை மீண்டும் திறக்க வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்க தலைவர் வக்கீல் ரங்கநாயகலு தலைமையில் விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். அப்போது 2 செம்மறி ஆடுகளுக்கு முக கவசம் அணிவித்து அழைத்து வந்திருந்தனர். பின்னர் விவசாயிகள், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரகுபதியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அதில், கொரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் விளைவித்த பருத்தி, மக்காச்சோளம், வத்தல், பருப்பு உள்ளிட்ட விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கப் பெறாததால் அவதிப்படுகின்றனர்.

கால்நடை சந்தைகளை திறக்க...

மேலும் கால்நடை சந்தைகள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக செயல்படாததால், ஆடு, மாடு, கோழி போன்றவற்றை உரிய விலைக்கு விற்க முடியாத நிலை உள்ளது. நாளை (சனிக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கால்நடை சந்தைகள் செயல்படாததால் விவசாயிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு உள்ளது.

எனவே கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட சந்தைகளை உடனே மீண்டும் திறக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த போராட்டத்தில் விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பரமேசுவரன், இளையரசனேந்தல் பிர்கா உரிமைமீட்பு குழு தலைவர் முருகன், ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story