துமகூரு மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு தேங்காய் எண்ணெயில் புதிய வகை சானிடைசர் அரசு அனுமதிக்காக காத்திருப்பு


துமகூரு மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு தேங்காய் எண்ணெயில் புதிய வகை சானிடைசர் அரசு அனுமதிக்காக காத்திருப்பு
x
தினத்தந்தி 30 July 2020 10:29 PM GMT (Updated: 30 July 2020 10:29 PM GMT)

தேங்காய் எண்ணெயில் புதிய வகை சானிடைசரை துமகூரு மாணவர் கண்டுபிடித்துள்ளார். அரசு அனுமதிக்காக அவர் காத்திருக்கிறார்.

பெங்களூரு,

தற்போது அனைவரின் உதடுகளிலும் தினமும் அதிகப்படியாக உச்சரிக்கப்படும் வார்த்தைகளில் முதன்மை இடத்தை கொரோனா பிடித்துள்ளது என்றால் மிகையல்ல. அந்த அளவுக்கு கடந்த 8 மாதங்களாக மக்களை தனது கோரப்பிடியில் கொரோனா ஆட்டுவித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தொடர்ந்து மக்கள் முகக்கவசம் அணிவதையும், அடிக்கடி கைகளை கிருமிநாசினி அல்லது சோப்புகளால் கைகளை கழுவுவது, சமூகவிலகலை கடைப்பிடிப்பது என தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுவிட்டனர். அதுவும் குறிப்பாக முகக்கவசம், சானிடைசர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. புதிய புதிய சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்களிலும் ஊழியர்கள் சானிடைசர் பயன்படுத்துவதை அதிகரித்துள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் துமகூருவை சேர்ந்த மாணவர், தேங்காய் எண்ணெயில் சானிடைசர் தயாரித்து அசத்தி உள்ளார். அதுபற்றி இங்கே காண்போம்...

தேங்காய் எண்ணெயில் சானிடைசர்

துமகூரு டவுனில் உள்ள எஸ்.ஐ.டி. கல்லூரியில் உயிரிவேதியியல் படித்து வருபவர், எச்.என்.சிதானந்த். இவர் தான் தேங்காய் எண்ணெயில் புதிய வகை சானிடைசரை உருவாக்கி உள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் உள்ளது. இது கொரோனா வைரஸ் கிருமியை அழிக்க வல்லது. கொரோனா உள்ளிட்ட பெரும்பாலான வைரஸ்களில் லிப்பிட் லேயர் என்ற அடுக்கு இருக்கும். தேங்காய் எண்ணெய், ஆல்கஹால், எலுமிச்சை ஆகியவை கலந்த கலவையால், அந்த வைரஸ் தொற்றை அழிக்க முடியும். இந்த 3 பொருட்களை பயன்படுத்தி இந்த சானிடைசரை உருவாக்கி உள்ளேன். இதை சந்தைப்படுத்த ஆயுஷ் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளேன்.

அரசு அனுமதிக்காக காத்திருப்பு

அவர்கள் அதனை ஆராய்ந்து அனுமதி கொடுத்ததும், இந்த தேங்காய் எண்ணெய் சானிடைசரை கர்நாடகத்தில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த சானிடைசர் 100 மில்லி ரூ.50 என விலை நிர்ணயித்துள்ளோம் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், துமகூரு மாவட்டத்தில் தேங்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெய் சானிடைசருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில், தேங்காய் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும், தேங்காய் சாகுபடி அதிகரிக்கும் என்றும் கூறினார்.

இந்த சானிடைசருக்கு கர்நாடக அரசு உரிய பரிசோதனைகளை நடத்தி அனுமதி அளிக்க வேண்டும். அதற்காக காத்திருக்கிறேன். அனுமதி கிடைத்ததும் அதனை வெளியிட முடிவு செய்துள்ளேன் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story