மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி303 பேருக்கு தொற்று உறுதி + "||" + 6 killed in Corona in Coimbatore district

கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி303 பேருக்கு தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி303 பேருக்கு தொற்று உறுதி
கோவை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 303 பேருக்கு தொற்று உறுதியானது.
கோவை,

கோவை பீளமேடு சவுரிபாளையத்தை சேர்ந்த 80 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. உடனே அவர் சிகிச்சைக்காக கடந்த 28-ந் தேதி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

சுண்டக்காமுத்தூரை சேர்ந்த 36 வயது ஆண் ஒருவர் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று முன்தினம் காலை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார். இந்தநிலையில் அவர் அன்று இரவே திடீரென உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதியானது.

செல்வபுரம் தில்லைநகரை சேர்ந்த 58 வயது ஆண் ஒருவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 27-ந் தேதி அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

வடமாநில வாலிபர்

கோவை சங்கனூர் மெயின் ரோடு நல்லாம்பாளையத்தை சேர்ந்த 48 வயதான ஒருவர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு கடந்த 28-ந் தேதி இரவு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் கோவை காந்திபுரம் வ.உ.சி. பூங்கா கைத்தறி மைதானத்தில் குடில் அமைத்து தங்கி கோவை- திருச்சி ரோட்டில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். அவர், கடந்த 28-ந் தேதி பணியின் போது தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதற்கிடையே அவரை பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் கோவையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 71-ஆக உயர்ந்து உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சாலைப்புதூரை சேர்ந்த 58 வயது ஆண் ஒருவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்று இரவே அவர் உயிரிழந்தார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

வெளி மாவட்டம் என்பதால் அவருடைய உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட வில்லை. அவரது உடல் கோவையிலேயே தகனம் செய்யப்பட்டது.

போலீஸ் நிலையங்கள் மூடல்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 28 வயது வீரர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று வந்தார். அவருக்கு கொரோனா உறுதியானது. கணபதி காவலர் குடியிருப்பை சேர்ந்த 40 வயது ஆண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அன்னூர் போலீஸ் நிலைய ஏட்டு உள்பட 4 போலீசாருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அன்னூர் போலீஸ் நிலையம் 2-வது முறையாக மூடப்பட்டது. கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீசுக்கு கொரோனா உறுதியானதால் அந்த போலீஸ் நிலையமும் மூடப்பட்டது. கீரணத்தத்தில் மளிகை கடைகாரருக்கு கொரோனா உறுதியானதால் அந்த கடை அடைக்கப்பட்டது.

303 ஆக உயர்வு

இதுதவிர செல்வபுரத்தில் 14 பேருக்கும், குனியமுத்தூரில் 8 பேருக்கும், கணபதியில் 7 பேருக்கும், ஆர்.எஸ்.புரம், பொள்ளாச்சியில் தலா 5 பேருக்கும், பீளமேடு, சூலூரில் தலா 4 பேர் உள்பட நேற்று ஒரே நாளில் 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,647 ஆக உயர்ந்து உள்ளது.

கோவையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 257 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். தற்போது 1,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.