கடலூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு மல்லிகை கிலோ ரூ.560-க்கு விற்பனை


கடலூரில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு மல்லிகை கிலோ ரூ.560-க்கு விற்பனை
x
தினத்தந்தி 30 July 2020 11:45 PM GMT (Updated: 30 July 2020 11:45 PM GMT)

கடலூரில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை கிலோ ரூ.560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலூர், 

பெண்களால் வீட்டிலேயே கடைபிடிக்கப்படுவது வரலட்சுமி நோன்பு அல்லது விரதம். இந்த வரலட்சுமி விரதத்தில் பெண்கள் வீட்டை அலங்கரித்து மகாலட்சுமியை நினைத்து விரதம் இருந்து, கணவரின் ஆயுட்காலம் அதிகரிக்க நோன்புக்கயிறு கட்டி வணங்குவார்கள்.

இந்த விரதம் ஆண்டுதோறும் ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் கடைபிடிக் கப்படும். சில வருடங்களில் ஆடி மாதத்திலும் வரும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் ஆடி மாத வெள்ளிக்கிழமையான இன்று கடைபிடிக்கப்படுகிறது.

விலை உயர்வு

இந்த விரதத்தின் போது பெண்கள், லட்சுமி பூஜை, துளசி பூஜை செய்வார்கள். மேலும் சுமங்கலி பெண்கள் விரதமிருந்து குங்குமம், பூ உள்ளிட்டவற்றை பிற பெண்களுக்கு கொடுத்து வணங்கி வழிபாடு நடத்துவார்கள். இதனால் பெண்கள் முன்கூட்டியே பூக்கள் வாங்குவதற்காக நேற்று பூ மார்க்கெட்டுகளுக்கு படையெடுக்க தொடங்கினர்.

மேலும் ஊரடங்கால் வெளிமாவட்டங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும், கடந்த 2 நாட்களாக மழை பெய்ததாலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு குறைந்தளவே பூக்கள் கொண்டு வரப்பட்டன. இதனால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மல்லிகை பூ

அதாவது நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.240-க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.560-க்கு விற்பனை செய்யப்பட்டது. வரத்து குறைவால் நேற்று மதியத்திற்குள் மல்லிகை பூ அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது. மேலும் நேற்று முன்தினம் ரூ.120-க்கு விற்பனையான முல்லை பூ ரூ.320-க்கும், ரூ.90-க்கு விற்ற சம்பங்கி ரூ.200-க்கும், ரூ.80-க்கும் விற்பனையான கேந்தி ரூ.100-க்கும், ரூ.240-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ரோஜா ரூ.300-க்கும், கோழிக்கொண்டை ஒரு கிலோ ரூ,80, மரிக்கொழுந்து ரூ.300, தாழம்பூ ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் பெண்கள் கூட்டம், கூட்டமாக வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கிச்சென்றன

Next Story