நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள்
x

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பயிர் காப்பீடு செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நடப்பு கார் பருவத்தில் நெல், உளுந்து, நிலக்கடலை, பருத்தி, வாழை, வெண்டை ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகள் அனைவரும் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளினால் உண்டாகும் மகசூல் இழப்பில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டதின்கீழ் அறிவிக்கப்பட்ட கிராமங்களில் குறிப்பிடப்பட்ட பயிர்களை காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

நெல், உளுந்து, வாழை, வெண்டை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதையொட்டி இ-சேவை மையங்கள் இன்று 24 மணி நேரமும் இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தென்காசி

தென்காசி வேளாண்மை இணை இயக்குனர் பாலச்சந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் நெல், உளுந்து, சோளம் பயிரிட்ட விவசாயிகள் தங்களது பயிர்களை காப்பீடு செய்ய இன்று (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். பருத்தி பயிருக்கு காப்பீடு செய்ய வருகிற 16-ந்தேதி கடைசி நாள் ஆகும். ஏக்கர் ஒன்றுக்கான காப்பீட்டுத்தொகை நெல் பயிருக்கு ரூ.29 ஆயிரத்து 600-ம், உளுந்து பயிருக்கு ரூ.16 ஆயிரத்து 550-ம், சோளம் பயிருக்கு ரூ.11 ஆயிரத்து 200-ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.20 ஆயிரத்து 500-ம், பருத்தி பயிருக்கு ரூ.12 ஆயிரத்து 25-ம் பெறுவதற்கு விவசாயிகள் பிரிமீயமாக நெல் பயிருக்கு ரூ.592-ம், உளுந்து பயிருக்கு ரூ.331-ம், சோளம் பயிருக்கு 224-ம், நிலக்கடலை பயிருக்கு ரூ.410-ம், பருத்தி பயிருக்கு ரூ.601-ம் செலுத்த வேண்டும்.

எனவே பயிர் காப்பீடு செய்வதற்கான முன்மொழிவு படிவம், பதிவு படிவம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் சாகுபடி அடங்கல் (விதைக்க முடியாத சூழ்நிலையில் விதைக்கும் முன்னர் பயிர் காப்பீடு செய்ய வேண்டுமானால் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் விதைப்பு சான்று), ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள், பொது சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story