வங்கிகள் கடன் இலக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்


வங்கிகள் கடன் இலக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 31 July 2020 12:49 AM GMT (Updated: 31 July 2020 12:49 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கிகள் கடன் இலக்கை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வங்கியாளர்கள் கூட்டம் மற்றும் விவசாய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கியாளர்கள் கூட்டம் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக நடத்தப்படாமல் இருந்தது. தமிழகத்தில் பொருளாதாரத்தை விரைந்து உயர்த்தும் வகையில் பொருளாதார நடவடிக்கைகளை 2 மடங்காக உயர்த்திட துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாவட்ட அளவிலும் துரிதமாக செயல்பட வேண்டும்.

இலக்கு

கடந்த ஆண்டு கடன் திட்ட அறிக்கையில் ரூ.9,654.39 கோடி குறியீடு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, ரூ.11,325.83 கோடி இலக்கு எட்டப்பட்டது. இது 117 சதவீதம் ஆகும். இந்த ஆண்டு ரூ.12,084 கோடி இலக்கு குறியீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேளாண்மைக்கு ரூ.5,007 கோடியும், தொழிற்கடன் ரூ.2,017 கோடியும், முன்னுரிமை செக்டார் கடன் ரூ.7,927 கோடியும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எனவே வங்கியாளர்கள் கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் அதிக அளவிலான விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து, கடன் இலக்கை எய்திட வேண்டும்.

4 மாதங்களுக்குள்..

அனைத்து வங்கிகளும் தங்களுக்கு வரும் கடன் விண்ணப்பங்களின் மீது உடனுக்குடன் முடிவெடுத்து பொருளாதார நடவடிக்கைகளை விரைவுப்படுத்திட வேண்டும். தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மீண்டு வந்தால்தான் பொருளாதார இழப்பீடுகளை சரிசெய்ய முடியும். வங்கிகள் இன்னும் 3 அல்லது 4 மாத காலத்துக்குள் குறியீட்டு இலக்கை முடிக்க வேண்டும். கடன் வழங்கப்பட்ட ஒரு வார காலத்துக்குள் மானியங்கள் வங்கிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நபார்டு மூலம் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களின் ஆவணங்களை டிஜிட்டல் செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வங்கியாளர்கள் பார்க்கும் வகையில் இ-சக்தி திட்டம் நாகப்பட்டிணம், விருதுநகர், நாமக்கல் மாவட்டங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் தூத்துக்குடி மாவட்டத்திலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு விவரங்களை வங்கிகள் உடனுக்குடன் அறிந்துகொண்டு கடன் உதவிகளை வழங்க முடியும். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடியில் பனைத்தொழில் மற்றும் ஆழ்வார்திருநகரியில் வாழை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் தொழில் கூட்டமைப்பு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த 2 நிறுவனங்களுக்கும் தலா ரூ.33 லட்சம் மானியம் வழங்கப்படும். இந்த நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டால் 3 ஆண்டுகளில் தலா ரூ.2 கோடி கடன் உதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய மற்றும் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், வங்கிகள் மற்றும் அலுவலர்கள் விரைந்து செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், முன்னோடி வங்கி துணை மேலாளர் விஜயகுமார், மாவட்ட தொழில்மைய மேலாளர் கண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், மகளிர் திட்ட உதவி அலுவலர் பிரேமா மற்றும் வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story