சேலம் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: 9.39 லட்சம் பேரின் விவரங்கள் சேகரிப்பு ஆணையாளர் சதீஷ் தகவல்


சேலம் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: 9.39 லட்சம் பேரின் விவரங்கள் சேகரிப்பு ஆணையாளர் சதீஷ் தகவல்
x
தினத்தந்தி 31 July 2020 4:00 AM GMT (Updated: 31 July 2020 4:00 AM GMT)

சேலம் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 9 லட்சத்து 39 ஆயிரத்து 649 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

சேலம், 


சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கணக்கெடுப்பு பணி

சேலம் மாநகர பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை முற்றிலுமாக தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்று வீட்டில் இருப்பவர்கள் விவரம் குறித்து, கணக்கெடுப்பு பணி மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இக்களப்பணியாளர்கள் மூலம் வீட்டில் இருப்பவர்களின் பெயர், வயது, தொலைபேசி எண், வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், சிறியவர்கள், பெரியவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் விவரம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணிபுரிவோர் விவரம், குடும்ப உறுப்பினர்களில் நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சுவாச கோளாறு, புற்று நோய் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

நோய் அறிகுறிகள்

இதன்படி கடந்த 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மாநகரப்பகுதிகளிலுள்ள மொத்த குடியிருப்புகளான 2 லட்சத்து 34 ஆயிரத்து 624 குடியிருப்புகளிலும், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதில், 9 லட்சத்து 39 ஆயிரத்து 649 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கணக்கெடுப்பு பணிகளின் போது காய்ச்சல், வறட்டு இருமல், சளி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ள 4 ஆயிரத்து 661 பேர் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் 225 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 152 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2-ம் கட்ட கணக்கெடுப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்குள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் மேற்கண்ட விவரங்களை தவறாமல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story