‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: திருவாரூர் கடைவீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போலீசார்


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: திருவாரூர் கடைவீதியில்  போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட போலீசார்
x
தினத்தந்தி 31 July 2020 5:46 AM GMT (Updated: 31 July 2020 5:46 AM GMT)

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருவாரூர் கடைவீதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

திருவாரூர், 

திருவாரூரில் காய்கறி, மளிகை, துணிக்கடை போன்ற எந்த பொருட்கள் வாங்க வேண்டுமானாலும் கடைவீதிக்கு தான் செல்ல வேண்டும். இதனால் எந்த நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் ஒரு சில கடை தங்களது எல்லை தாண்டி விரிவுப்படுத்தல், நடைபாதை கடைகள் மற்றும் கடைவீதி உள்ளே எந்த நேரமும் கனரக வாகனம் செல்வதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கிறது.

திருவாரூரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் கடைவீதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலின் காரணமாக கொரோனா தொற்று பரவும் அபாயம் இருந்தது. எனவே போக்குவரத்தினை சீரமைத்திட போலீசார் நியமிக்க வேண்டும். கனரக வாகனங்கள் கடைவீதிக்குள் வருவதற்கு உரிய கால நேரத்தை கடைபிடிக்க வேண்டும் என செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் வெளியிடப்பட்டது.

போலீசார் நியமனம்

இந்த செய்தி எதிரொலியாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பேலீசார், திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கடைவீதி செல்லும் சாலை மற்றும் நேதாஜி சாலையில் இருந்து கடைவீதி செல்லும் ஆற்றுபாலம் ஆகிய இடங்களில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் மோட்டார் சைக்கிள் தவிர அனைத்து வாகனங்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடைவீதியில் எந்தவித போக்குவரத்து நெருக்கடி இன்றி பொதுமக்கள் சென்று பொருட்களை வாங்கி சென்றனர்.

போக்குவரத்து நெரிசலையும், கொரோனா பரவல் அபாயத்தையும் சுட்டி காட்டிய ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், உடனடியாக போக்குவரத்தினை சீரமைத்திட நடவடிக்கை எடுத்த போலீஸ்துறையினருக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story