ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலி


ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 31 July 2020 5:38 PM GMT (Updated: 31 July 2020 5:40 PM GMT)

ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர், 

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களில் 7 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்தவர் ஜரினாபானு (வயது 58). இவர், கொரோனா தொற்று சிகிச்சைக்காக கடந்த 22-ந்தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்பூர் ஜலால் ரோடு ஆஜாத் நகரை சேர்ந்தவர் முஹம்மத் உசேன். அவருடைய மனைவி ஜெரினா அசின் (58). இவர், கொரோனா தொற்று காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

ஆம்பூர் அருகே உள்ள பெரியாங்குப்பம் சர்ச் ரோட்டில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி (45). இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா கரடிக்குப்பத்தை சேர்ந்த நாதமுனி (70) என்பவர் நேற்று முன்தினம் காலை கொரோனா தொற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் இறந்து போனார்.

ஆற்காடு நகராட்சி குடியிருப்பை சேர்ந்தவர் சுந்தரம். இவருடைய மனைவி கோதாவரி (80). இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 27-ந்தேதி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை மூதாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிறிது நேரத்தில் பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 5 பேரின் உடல்களுடன் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர்

குடியாத்தத்தை அடுத்த பசுமாத்தூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவதாஸ் (68). சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் தேவதாஸ் பரிதாபமாக இறந்தார்.

குடியாத்தம் செதுக்கரை நேருஜிநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (68). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவர் சிலதினங்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று கண்டறியப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

இவர்கள் தவிர திருவண்ணாமலையில் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர்.

அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

திருவண்ணாமலை நல்லவன்பாளையத்தை சேர்ந்த 60 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல திருவண்ணாமலையை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவுக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன் மூலம் ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

Next Story