கொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிட உத்தரவிடமுடியாது மும்பை ஐகோர்ட்டு மறுப்பு


கொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிட உத்தரவிடமுடியாது மும்பை ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 31 July 2020 7:09 PM GMT (Updated: 31 July 2020 7:09 PM GMT)

கொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிட அரசுக்கு உத்தரவிடமுடியாது என மும்பை ஐகோர்ட்டு மறுத்து உள்ளது.

மும்பை,

சோலாப்பூரை சேர்ந்த விவசாயி ஒருவரும், சட்ட மாணவி வைஷ்ணவி கோலே என்பவரும் மும்பை ஐகோர்ட்டில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில், கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் பெயரை வெளியிட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் என கூறியிருந்தனர். மேலும் பல முக்கிய பிரமுகர்களும், நடிகர்களும் கூட தங்களுக்கு நோய் பாதிப்பு உள்ளதை வெளிப்படையாக அறிவித்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சோதனை செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனர் என மனுதாரர்களின் வக்கீல் கோர்ட்டில் கூறியிருந்தார்.

ஐகோர்ட்டு மறுப்பு

இந்தநிலையில் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு கொரோனா நோயாளிகளின் பெயர்களை அறிவிப்பதால் சமூகத்துக்கு நன்மை கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள், ஆய்வு முடிவுகள் இருந்தால் அதுபோன்ற தகவல்களுடன் புதிய மனுவை தாக்கல் செய்யுமாறு மனுதாரர்களிடம் கூறியது.

மேலும் தற்போது கொரோனா நோயாளிகளின் பெயரை வெளியிடுமாறு உத்தரவிட முடியாது என கூறிய மும்பை ஐகோர்ட்டு, மனுவை வாபஸ் பெறுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.

Next Story