குழந்தைகள் ஆன்-லைன் கல்வி கற்க தாலி சங்கிலியை அடகு வைத்து டி.வி. வாங்கிய பாசக்கார தாய்


குழந்தைகள் ஆன்-லைன் கல்வி கற்க தாலி சங்கிலியை அடகு வைத்து டி.வி. வாங்கிய பாசக்கார தாய்
x
தினத்தந்தி 1 Aug 2020 4:21 AM IST (Updated: 1 Aug 2020 4:21 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் ஆன்-லைன் கல்வி கற்க வசதியாக தாலி சங்கிலியை அடகுவைத்து பாசக்கார தாய் டி.வி. வாங்கி கொடுத்துள்ளார். அந்த குழந்தைகளின் படிப்புக்கான முழுபொறுப்பையும் ஏற்பதாக மந்திரி சி.சி.பட்டீல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகள் தங்களது நிறுவனங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்-லைனில் செல்போன் வாயிலாக வகுப்புகளை எடுத்து வருகிறது. கர்நாடக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் படிப்புக்காக கன்னட அரசு, சந்தனா என்ற சேனலில் ஆன்-லைன் மூலம் கல்வி கற்பித்தலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

இந்த ஆன்-லைன் கல்விக்காக கிராமப்புறங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். சிக்கமகளூரு, தட்சிணகன்னடா மாவட்டங்களில் ஆன்-லைன் வகுப்புக்காக மலைப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கூடாரம் அமைத்து தங்கியிருந்து வருகிறார்கள். வனவிலங்குகள் அச்சுறுத்தலுக்கு மத்தியில், சரியான இணையதள வசதி இல்லாததால் தினமும் இத்தகைய சூழ்நிலையில் அவர்கள் ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்று வருகிறார்கள்.

தாலி சங்கிலியை அடகுவைத்த தாய்

இந்த நிலையில் தங்களது பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக கொரோனா பரவல் காரணமாக வேலைவாய்ப்பு இழந்த ஒரு பெண், தனது தாலி சங்கிலியை விற்று, ஆன்-லைன் கல்விக்காக டி.வி. வாங்கி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின் வருமாறு:-

கதக் மாவட்டம் நரகுந்து தாலுகா ராதேரா நாகனூர் கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அரசு பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்கள். தற்போது கொரோனாவால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் கர்நாடக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஆன்-லைன் வகுப்புகள் சந்தனா அரசு சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் கஸ்தூரி வீட்டில் டி.வி. இல்லை. இதனால் கடந்த ஒரு மாதங்களாக அவரது பிள்ளைகள் ஆன்-லைன் மூலம் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சில சமயங்களில் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு சென்று குழந்தைகள் கல்வி கற்று வந்தனர்.

தனது வீட்டில் டி.வி. இல்லாததால் பிள்ளைகள் பக்கத்துவீடுகளுக்கு சென்று பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் ஆன்-லைனில் கல்வி கற்பதை நினைத்து கஸ்தூரி மனம் உடைந்தார். இதனால் அவர் தனது வீட்டுக்கு டி.வி. வாங்க முடிவு செய்தார். அதன்படி அவர் தனது தாலி சங்கிலியை அடகு வைத்து ரூ.20 ஆயிரம் வாங்கியுள்ளார். இதில் ரூ.14 ஆயிரத்திற்கு ஒரு டி.வி.யை வாங்கியுள்ளார். அந்த டி.வி.யில் தற்போது அவரது குழந்தைகள் ஆன்-லைன் கல்வியை கற்று வருகிறார்கள்.

பிள்ளைகளின் கல்விக்காக டி.வி. வாங்கினேன்

இதுகுறித்து கஸ்தூரி கூறுகையில், நாங்கள் ஏழை கூலி தொழிலாளர்கள். நாங்கள் சரியாக படிக்கவில்லை. இதனால் எங்கள் குழந்தைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறோம். எங்கள் வீட்டில் பழைய டி.வி. இருந்தது. அதுவும் பழுதாகிவிட்டது. மேலும் டி.வி. இருந்தால் குழந்தைகள் நன்றாக படிக்கமாட்டார்கள் என கருதி டி.வி. வாங்காமல் இருந்து வந்தேன். ஆனால் கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், ஆன்-லைனில் கல்வி கற்பிக்கப்படுகிறது. டி.வி. இல்லாததால் எனது குழந்தைகள் ஆன்-லைனில் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எனது தாலி சங்கிலியை அடகு வைத்து பிள்ளைகளின் கல்விக்காக டி.வி.யை வாங்கினேன் என்று கிராமப்புற அம்மாக்களின் எண்ணத்தை கண்கலங்கியபடி கஸ்தூரி பிரதிபலித்தார்.

இதுதொடர்பான செய்திகள் நேற்று சமூகவலைத்தளங்களில், கன்னட செய்தி தொலைக்காட்சிகளில் வெளியாகி நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

மந்திரி உறுதி

இதுகுறித்து அறிந்த கர்நாடக கனிமவளத் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான சி.சி.பட்டீல், ஏழை குடும்பத்தை சேர்ந்த கஸ்தூரியின் செயல் பாராட்டுக்குரியது. அவரது பிள்ளைகள் படிக்க அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க நான் நடவடிக்கை எடுத்துள்ளேன். அவர்களின் படிப்புக்கான முழு பொறுப்பையும் ஏற்கிறேன். இன்னும் 2 நாட்களில் கஸ்தூரியின் பிள்ளைகளுக்கு தேவையான கல்வி உதவிகளை முழுமையாக செய்து கொடுப்பேன் என்றார்.

Next Story