வரமகாலட்சுமி பண்டிகையையொட்டி வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்ட பெண்கள்


வரமகாலட்சுமி பண்டிகையையொட்டி வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்ட பெண்கள்
x
தினத்தந்தி 31 July 2020 10:58 PM GMT (Updated: 31 July 2020 10:58 PM GMT)

வரமகாலட்சுமி பண்டிகையையொட்டி கர்நாடகத்தில் பெண்கள் தங்களது வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் ஆண்டுதோறும் வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும், தாலி பாக்கியம் நிலைக்க வேண்டும் என்பதற்காக பெண்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் வரமகாலட்சுமி பண்டிகையின் போது பெண்கள், தங்களது பக்கத்து வீடுகளில் வசிக்கும் சுமங்கலி பெண்களை தங்களின் வீட்டிற்கு அழைத்து பூஜைகள் செய்வார்கள். பின்னர் சுமங்கலி பெண்களுக்கு பூ, பழம், குங்குமம் ஆகியவற்றை கொடுத்து அனுப்புவார்கள். மேலும் சுமங்கலி பெண்களின் கால்களில் விழுந்து தொட்டும் கும்பிடுவார்கள். பின்னர் சுமங்கலி பெண்கள் தங்களது தாலிக்கு மஞ்சள், குங்குமமிட்டு கொள்வார்கள். இந்த பண்டிகையையொட்டி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சிறப்பு பூஜை

இந்த நிலையில் கர்நாடகத்தில் நேற்று வரமகாலட்சுமி பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக பெண்கள் தங்கள் வீட்டில் எளிமையான முறையில் வரமகாலட்சுமி பண்டிகையை கொண்டாடினார்கள். சாமி படங்களை பூக்கள் அலங்கரித்து, பணம், நகை, பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

வரமகாலட்சுமி பண்டிகையையொட்டி பெங்களூருவில் உள்ள முக்கிய கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு சாமியை தரிசனம் செய்து சென்றனர். இதுபோல சிவமொக்கா, மைசூரு, மங்களூரு, பல்லாரி, துமகூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று வரமகாலட்சுமி பண்டிகையையொட்டி பெண்கள் தங்களது வீடுகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் மார்க்கெட்டுகளில் பூ, பழம் விற்பனை அமோகமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story