கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட மேலும் 112 பேருக்கு கொரோனா


கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட மேலும் 112 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Aug 2020 3:45 AM IST (Updated: 1 Aug 2020 8:16 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு ஏற்கனவே தொற்று உறுதியாகி இருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு ஊழியருக்கு கொரோனா பாதித்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தின் பின்பக்கம் உள்ள புதிய கட்டிடத்தில் நுழைவுவாயில் ஏற்கனவே அடைக்கப்பட்டது. தற்போது பழைய கட்டிடத்தின் முகப்பு பகுதியிலும் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கலெக்டர் அலுவலக ஊழியர் உள்பட 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 167 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 110 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,279 ஆக உயர்ந்துள்ளது. 863 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

புதுக்கோட்டை நகராட்சியில் 14 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது. இந்த பகுதியிலும், நகராட்சியில் மற்ற இடங்களிலும் கிருமி நாசினி தெளிப்பு, கபசுர குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் நகராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கறம்பக்குடி அருகே உள்ள மணமடை கிராமத்தில் ஒரு வயது குழந்தை, 70 வயது முதியவர், இருங்களன்விடுதியில் 6 வயது சிறுவன் உள்பட 4 பேருக்கும், வாண்டான்விடுதியை சேர்ந்த 36 வயது வாலிபர், கறம்பக்குடி புதுக்கோட்டை சாலையை சேர்ந்த ஒருவர், மறவன்பட்டியை சேர்ந்த பெண் என நேற்று மட்டும் மொத்தம் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அரிமளம் ஒன்றியம் லேனா விலக்கு பகுதியில் உள்ள இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியோர் முகாமில் சளி, காய்ச்சல் உடையவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 55 வயது ஆண், 30 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். லேனா விலக்கு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் முதியவர், அவருடைய மனைவி ஆகியோர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

ஆதனக்கோட்டை, பெருங்களூர், வாராப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று மட்டும் 7 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. ஆதனக்கோட்டை அம்பேத்கர் நகரை சேர்ந்த 38 வயது வாலிபர் தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது அவரது தாய், மனைவி, மகள் உள்பட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுவரை ஆதனக்கோட்டை சுகாதார நிலைய வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

Next Story