சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா தொற்று தடுப்பிற்கான சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் இந்த மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியின் 2 விடுதிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப்-கலெக்டர் விசுமகாஜன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், பதிவாளர் ஞானதேவன், மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட சுகாதார துணை இயக்குனர் டாக்டர் கீதா, துணை போலீஸ் சுப்பிரண்டு கார்த்திகேயன், தாசில்தார் ஹரிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் சிலரிடம் சிகிச்சை முறை குறித்து காணொலி காட்சி மூலம் கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு படுக்கை வசதிகளும், மருத்துவ உபகரணங்களும் உள்ளது. ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் 200 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் 150 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரத்தில் கூடுதலாக 80 படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவதற்கான ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. வருங்காலத்தில் நோயாளிகள் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் கிராமங்களில் வீடு, வீடாக பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணமடைந்து வருகின்றனர்.
கொரோனா தொற்றை மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும். மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிய வேண்டும். சானிடைசர் மூலம் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும். கிராமங்களில் கணக்கெடுப்பு எடுக்கும் போது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கூடுதலாக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்தவமனையில் 200-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story