160 பேருக்கு தொற்று பாதிப்பு: குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி - நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரம்


160 பேருக்கு தொற்று பாதிப்பு: குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி - நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகள் தீவிரம்
x
தினத்தந்தி 1 Aug 2020 6:24 AM GMT (Updated: 1 Aug 2020 6:24 AM GMT)

குமரி மாவட்டத்தில் கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ளது. இதனால் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாகர்கோவில்,

தினமும் 150-க்கும் மேற்பட்டோர் கடந்த சில வாரங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏழை, பணக்காரன் என பாகுபாடின்றி அனைவரையும் பாதிப்படைய செய்த கொரோனா, கள பணியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. டாக்டர்கள், நர்சுகள், போலீசார், சுகாதாரத்துறையினர் என ஒவ்வொருவரையும் கொரோனா பதம் பார்த்து வருகிறது.

இதற்கிடையே குமரியில் கடந்த சில நாட்களாக தினமும் 2 பேர் கொரோனாவால் இறந்து வந்தனர். இந்தநிலையில் உச்சபச்சமாக கொரோனா ஒரே நாளில் 7 பேரின் உயிரை பறித்த சோக சம்பவம் நடந்துள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

அதாவது நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த 68 வயது முதியவர், மயிலாடியை சேர்ந்த 29 வயது வாலிபர், சொத்தவிளையை சேர்ந்த 68 வயது மூதாட்டி, கருங்கலில் ஒரு ஆண், புத்தேரியில் ஒரு ஆண், மார்த்தாண்டத்தில் ஒரு கன்னியாஸ்திரி மற்றும் மாஞ்சாலுமூட்டில் ஒரு ஆண் என மொத்தம் 7 பேர் கொரோனாவுக்கு இரையானார்கள்.

இதில் வடசேரியை சேர்ந்த 68 வயது முதியவர் கள்ளநோட்டுகள் அச்சடிக்கும் கும்பலை சேர்ந்தவர் ஆவார். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,628 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 160 பேர் தொற்றுக்கு ஆளானார்கள். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மற்றும் கொரோனா கவனிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,788 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியான சம்பவம் குமரி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுஒருபுறம் இருக்க, மற்றொரு புறம், கொரோனா தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா பாதித்த பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடக்கிறது.

மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Next Story