திருவட்டார் அருகே, செல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை - தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சோகம்


திருவட்டார் அருகே, செல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை - தூக்குப்போட்டு உயிரை மாய்த்த சோகம்
x
தினத்தந்தி 1 Aug 2020 12:14 PM IST (Updated: 1 Aug 2020 12:14 PM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே செல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருவட்டார், 

திருவட்டார் அருகே கோவிக்கோட்டுவிளை வீயனூர் பகுதியை சேர்ந்தவர் வினுகுமார், தொழிலாளி. இவருடைய மகன் கிஷோன் (வயது 14), 9-ம் வகுப்பு மாணவர். வினுகுமாரின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் தன்னுடைய மகன் கிஷோனை சகோதரியின் பராமரிப்பில் வினுகுமார் வளர்த்து வந்தார். கிஷோன் அங்கேயே தங்கியபடி ஒரு பள்ளியில் படித்து வந்தார். வினுகுமார், அவருடைய தாயாருடன் வசித்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோன் தன்னுடைய தந்தை வீட்டுக்கு வந்தார். அங்கு பாட்டியிடம் செல்போன் வாங்கித் தரும்படி கிஷோன் வலியுறுத்தியதாக தெரிகிறது. ஆனால் பாட்டி செல்போன் வாங்கி கொடுக்கவில்லை. இது அந்த மாணவனுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கிஷோன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்தார். நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற பாட்டி, தந்தை வீட்டிற்கு வந்த போது கிஷோன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து வினுகுமார் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் வாங்கி தராததால் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story