மாவட்ட செய்திகள்

முறப்பநாட்டில் மாயமான 3 சிறுவர்கள் ஒரு மணி நேரத்தில் மீட்பு + "||" + In murappanattil Missing 3 boys Recovery in an hour

முறப்பநாட்டில் மாயமான 3 சிறுவர்கள் ஒரு மணி நேரத்தில் மீட்பு

முறப்பநாட்டில் மாயமான 3 சிறுவர்கள் ஒரு மணி நேரத்தில் மீட்பு
முறப்பநாட்டில் மாயமான 3 சிறுவர்கள் ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகேயுள்ள நாணல்காட்டான்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோரின் பேத்தி சத்யஜோதி (வயது 12), பேரன்கள் ஹரி சிவகணேஷ் (11) மற்றும் ஸ்ரீதர் (10). இந்த 3 சிறுவர்களும் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். மாலை 5 மணி ஆகியும் அவர்கள் வீடு திரும்பவில்லை.


இதுகுறித்து அவர்களது தாத்தா மற்றும் பாட்டி மாலை 6 மணிக்கு முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் புகார் அளித்தனர். உடனடியாக போலீசார் அருகில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுவர்கள் வட வல்லநாடு காட்டுப்பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் விரைந்து சென்று 3 சிறுவர்களையும் மீட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் தங்களது தாய், தந்தையர் குடும்பச்சண்டை காரணமாக வீட்டை விட்டு சென்று விட்டதாகவும், இதனால் தங்கள் தாத்தா, பாட்டியுடன் வசித்து வருவதாகவும், பெற்றோர் வீட்டை விட்டு சென்றுவிட்டதால் மனவருத்தத்தில் வீட்டில் இருந்து வெளியேறி எங்காவது செல்வது என்று முடிவெடுத்து சென்றதாகவும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறுவர்களுக்கு அறிவுரைகள் கூறி உணவு கொடுத்தார். பின்னர் அவர்களை தாத்தா, பாட்டியிடம் ஒப்படைத்தார்.

புகார் வந்த ஒரு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு சிறுவர்களை மீட்ட முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்குமார், ராஜா ராபர்ட் மற்றும் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டினார்.