ராதாபுரம் அருகே ரூ.4 கோடியில் நம்பியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை


ராதாபுரம் அருகே ரூ.4 கோடியில் நம்பியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை
x
தினத்தந்தி 1 Aug 2020 9:45 PM GMT (Updated: 1 Aug 2020 8:24 PM GMT)

நெல்லையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், கண்ணநல்லூரில் நம்பியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

நெல்லை, ஆக.2-

ராதாபுரம் அருகே உள்ள கண்ணநல்லூர் பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் இன்பதுரை எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அவர், சட்டப்பேரவையிலும் வலியுறுத்தினார். தொடர்ந்து நெல்லையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், கண்ணநல்லூரில் நம்பியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து புதிய தடுப்பணை கட்ட ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதையடுத்து கண்ணநல்லூரில் நம்பியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. சென்னையில் இருந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் புதிய தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். கண்ணநல்லூரில் நம்பியாற்றின் கரையில் நடந்த விழாவில், இன்பதுரை எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து, புதிய தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். நம்பியாற்றின் 5-வது அணைக்கட்டான கண்ணநல்லூர் அணைக்கட்டின் கீழ் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்தில் புதிய தடுப்பணை அமைக்கப்படுகிறது. 140 மீட்டர் நீளத்திலும், 1½ மீட்டர் உயரத்திலும் புதிய தடுப்பணை அமைக்கப்பட உள்ளது.

விழாவில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் மாரியப்பன், உதவி செயற்பொறியாளர்கள் மணிகண்டன், ராஜன், வள்ளியூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகானந்தம், வள்ளியூர் மார்க்கெட் சொசைட்டி தலைவர் முருகேசன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பொன்செல்வன், கண்ணநல்லூர் சந்திரசேகர், திசையன்விளை ஜெயக்குமார், அரசு வக்கீல் பழனி சங்கர், எட்வர்டு சிங், ராதாபுரம் மதன், கருப்பசாமி, பணகுடி ஜெகன், கல்யாணசுந்தரம், அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story