சட்ட விரோத மதுவிற்பனையை தடுக்க மதுக்கடையை திறக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - கோட்டூரில் பரபரப்பு


சட்ட விரோத மதுவிற்பனையை தடுக்க மதுக்கடையை திறக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - கோட்டூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Aug 2020 3:45 AM IST (Updated: 2 Aug 2020 4:23 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூரில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க மதுக்கடையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டூர், 

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றுக்கு செல்லும் வழியில் முள்ளியாற்றங்கரையில் மதுக்கடையை திறக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக போராட்டங்களும் நடைபெற்று உள்ளன.

அதேபோல சட்ட விரோதமாக நடைபெறும் மது விற்பனையை தடுப்பதற்காக கோட்டூரில் மதுக்கடையை திறக்க வேண்டும் என மற்றொரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கோட்டூரில் 7 இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும், மதுக்கடையை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் நேற்று போலீஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வர்த்தக சங்க தலைவர் துரைராஜன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு சென்ற பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து முறையிட்டனர்.

அப்போது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பொதுமக்களிடம் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story