கர்நாடகத்தில் வேகமாக பரவுகிறது: ஒரே நாளில் 98 பேர் பலி மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.30 லட்சத்தை நெருங்கியது


கர்நாடகத்தில் வேகமாக பரவுகிறது: ஒரே நாளில் 98 பேர் பலி மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.30 லட்சத்தை நெருங்கியது
x
தினத்தந்தி 1 Aug 2020 11:29 PM GMT (Updated: 1 Aug 2020 11:29 PM GMT)

கர்நாடகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்த வைரஸ் 98 பேரின் உயிரை குடித்துள்ளது. இந்த நிலையில் மேலும் ஒரு மந்திரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். நேற்றுடன் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.30 லட்சத்தை நெருங்கியது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஜூன் மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமலும், எந்தவித பாகுபாடுமின்றியும் எல்ரோரையும் இந்த வைரஸ் தாக்கி வருகிறது. கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களாக தினமும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் என பாகுபாடின்றி தனது தாக்குதலை கொரோனா தொடுத்து உள்ளது.

கர்நாடகத்தில் ஏற்கனவே மந்திரிகள் சி.டி.ரவி, ஆனந்த்சிங், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் பரத் ஷெட்டி, ராஜ்குமார் பட்டீல் தெல்கர், அனில் பெனகே, பாரண்ணா முனவள்ளி, பசவராஜ் மத்திமோட், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேகவுடா, அஜய்சிங், சிவண்ணா, பிரசாந்த் அப்பய்யா, ராஜசேகர் பட்டீல், மகாந்தேஷ் கவுஜலகி, ரங்கநாத், பரமேஸ்வர் நாயக், ராகவேந்திர ஹித்னால், சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா ஆகியோரும், எம்.பி.க்கள் சுமலதா அம்பரீஷ், பகவந்த் கூபா மற்றும் மேல்-சபை உறுப்பினர்கள் பிரானேஷ், சந்தேஷ் நாகராஜ், சந்திரசேகர் பட்டீல் ஆகியோரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டு உள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக விவசாயத் துறை மந்திரி பி.சி.பட்டீலின் மனைவிக்கும், மருமகனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதனால் மந்திரியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். தற்போது அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது குறித்து அவர் டுவிட்டரில் வீடியோ தகவலாக பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் என்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டேன். இதில் எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. அதனால் என்னை நான் எனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். கொப்பலில் நான் பங்கேற்ற கூட்டத்தில் என்னுடன் இருந்த 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

மேலும் சமீபத்தில் கொப்பல் மற்றும் இரேகெரூரில் என்னுடன் தொடர்பில் இருந்த யாருக்காவது அறிகுறி இருந்தால் அவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள். யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை. கொரோனாவுக்கு எதிராக போராடி வெற்றி அடைவேன் என்று நம்பிக்கை உள்ளது. உங்களின் ஆசி மற்றும் வாழ்த்து என் மீது இருக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மந்திரி பி.சி.பட்டீலையும் சேர்த்து கர்நாடகத்தில் இதுவரை 3 மந்திரிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல். 2 எம்.பி.க்கள் என கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகள் மொத்தம் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வந்தபோதிலும், வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனால் கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்டு வந்த ஞாயிறு முழு ஊரடங்கும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இந்தநிலையில் கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் தொற்றுக்கு 98 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 5,172 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 1 லட்சத்து 24 ஆயிரத்து 115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 5,172 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக கொரோனா பாதித்தோரில் பெங்களூரு நகரில் 1,852 பேர், மைசூருவில் 365 பேர், பல்லாரியில் 269 பேர், கலபுரகியில் 219 பேர், பெலகாவியில் 219 பேர், தார்வாரில் 184 பேர், ஹாசனில் 146 பேர், தட்சிண கன்னடாவில் 139 பேர், உடுப்பியில் 136 பேர், பாகல்கோட்டையில் 134 பேர், விஜயாப்புராவில் 129 பேர், சிவமொக்காவில் 119 பேர், ராய்ச்சூரில் 109 பேர், தாவணகெரேயில் 108 பேர், கொப்பலில் 107 பேர், துமகூருவில் 99 பேர், கதக்கில் 99 பேர், மண்டியாவில் 95 பேர், பெங்களூரு புறநகரில் 93 பேர், சிக்பள்ளாப்பூரில் 72 பேர், சித்ரதுர்காவில் 60 பேர், சிக்கமகளூருவில் 57 பேர், பீதரில் 52 பேர், ஹாவேரியில் 52 பேர், உத்தரகன்னடா, ராமநகரில் தலா 51 பேர், சாம்ராஜ்நகரில் 43 பேர், யாதகிரியில் 39 பேர், கோலாரில் 39 பேர், குடகில் 35 பேர் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 98 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெங்களூரு நகரில் 27 பேர், மைசூருவில் 9 பேர், பல்லாரியில் ஒருவர், கலபுரகியில் 5 பேர், பெலகாவியில் 4 பேர், தார்வாரில் 8 பேர், ஹாசனில் 2 பேர், தட்சிண கன்னடாவில் 8 பேர், உடுப்பியில் 6 பேர், விஜயாப்புராவில் ஒருவர், சிவமொக்காவில் 4 பேர், தாவணகெரேயில் 4 பேர், கொப்பல், துமகூரு, கதக்கில் தலா 2 பேர், மண்டியா, சிக்பள்ளாப்பூரில் தலா ஒருவர், சித்ரதுர்காவில் 3 பேர், பீதரில் 4 பேர், உத்தரகன்னடாவில் ஒருவர், யாதகிரியில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,412 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை 53 ஆயிரத்து 648 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 3,860 பேர் அடங்குவர். 73 ஆயிரத்து 219 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 602 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலத்தில் இதுவரை 13 லட்சத்து 85 ஆயிரத்து 552 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 34 ஆயிரத்து 760 மாதிரிகள் அடங்கும். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.30 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த மாதத்தில் (ஜூலை) மட்டும் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஆகஸ்டு மாதத்தில் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் கொரோனாவை சமாளிக்க கர்நாடக அரசும், சுகாதாரத் துறையும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மக்கள் கொரோனா பீதியில் உறைந்து போய் உள்ளனர்.

Next Story