மரக்காணம் அருகே, திருட்டு வழக்கில் ஜாமீனில் வந்தவர் கழுத்தை இறுக்கி கொலை - நண்பர் கைது


மரக்காணம் அருகே, திருட்டு வழக்கில் ஜாமீனில் வந்தவர் கழுத்தை இறுக்கி கொலை - நண்பர் கைது
x
தினத்தந்தி 1 Aug 2020 10:00 PM GMT (Updated: 2 Aug 2020 2:44 AM GMT)

மரக்காணம் அருகே திருட்டு வழக்கில் கைதாகி, ஜாமீனில் வந்தவரை கழுத்தை இறுக்கி கொலலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த கரிப்பாளையம் இலுப்பதோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சுதாகர் (வயது 40), கூலித்தொழிலாளி. இவரும் மரக்காணம்- புதுச்சேரி சாலை பகுதியை சேர்ந்த சத்தியநாராயணன் (38) என்பவரும் நண்பர்கள் ஆவர்.

சுதாகர், அடிக்கடி கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை எக்கியார்குப்பம் செல்லும் வழியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் சுதாகரும், சத்தியநாராயணனும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சுதாகரை பார்த்து, எதற்காக கோவில் உண்டியலை உடைத்து திருடுகிறாய் என்று சத்தியநாராயணன் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சத்தியநாராயணன், தான் வைத்திருந்த துண்டால் சுதாகரின் கழுத்தில் போட்டு இறுக்கினார். இதில் அவர் மூச்சுத்திணறி அதே இடத்திலேயே இறந்தார். பின்னர் சத்தியநாராயணன் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலை செய்யப்பட்ட சுதாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியநாராயணனை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவர் வெளியூருக்கு தப்பிச்செல்வதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று சத்தியநாராயணனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

Next Story