மோட்டார் சைக்கிள் திருடர்கள் மீது வழக்கு பதிய காலதாமதம்: புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தை பா.ஜனதாவினர் முற்றுகை
மோட்டார் சைக்கிள் திருடர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் செய்ததை கண்டித்து நேற்று பா.ஜனதாவினர் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் நீலாம்பாள் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சத்தியமூர்த்தி. இவர் நாமக்கல் மாவட்ட பா.ஜனதா தலைவராக இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் மொட்டை மாடியில் நடைபயிற்சி மேற்கொண்டு உள்ளார்.
அப்போது அருகில் உள்ள தெருவில் ஜெய்சங்கர் என்பவரின் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் 2 பேர் திருட முயன்று உள்ளனர். இதையடுத்து சத்தியமூர்த்தி, அதே கட்சியின் நிர்வாகி ராம்குமார் என்பவருடன் அங்கு வந்து மோட்டார் சைக்கிளை திருட முயன்ற நபர்களை பிடிக்க முயற்சி செய்து உள்ளார்.
ஆனால் மர்ம ஆசாமிகள் இருவரும் சத்தியமூர்த்தி மற்றும் அவரது கட்சி நிர்வாகி ராம்குமார் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். ஆனால் தாங்கள் வந்த மோட்டார்சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு சென்ற போலீசார் மர்ம ஆசாமிகள் விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.
இதற்கிடையே இதுதொடர்பாக சத்தியமூர்த்தி தரப்பில் புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று மாலை பா.ஜனதாவினர் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சமரசம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, உடனடியாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து பா.ஜனதாவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே நேற்று இரவு மோட்டார் சைக்கிளை திருட முயன்ற நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story