குலசேகரபுரம் சுடலை மாடசாமி கோவிலில் துணிகர கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
குலசேகரபுரம் சுடலை மாடசாமி கோவிலில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து குத்துவிளக்கு மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி,
கொட்டாரம் அருகே குலசேகரபுரத்தில் ஆற்றங்கரை மயான சுடலை மாடசாமி கோவில் உள்ளது. சம்பவத்தன்று இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் அவர் கோவிலை திறப்பதற்காக வந்தார். அப்போது கோவிலின் அலுவலக அறை பூட்டு உடைக்கப்பட்டு இரும்பு கிரில் கதவு திறந்து கிடந்தது.
மேலும், பூஜை பொருட்கள் வைக்கக்கூடிய அறையின் ஜன்னல் கம்பிகளும் உடைக்கப்பட்டு கிடந்தன. இதை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் கோவில் நிர்வாக குழுத்தலைவர் யோகிஸ்வரன் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மர்மநபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து அங்கிருந்த 3 பித்தளை விளக்குகள், ஒரு மின்விசிறி, பித்தளை பாத்திரங்கள் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது தெரிய வந்தது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்த அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கோவிலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே கன்னியாகுமரி பகுதியில் தெற்கு குண்டல் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், பஞ்சலிங்கபுரம் முத்தாரம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவில், கொட்டாரம் ராமர் கோவில், அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் என 5 கோவில்களில் தொடர்ந்து உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுவரை இந்த கொள்ளையில் துப்பு கிடைக்கவில்லை. இதற்கிடையே குலசேகரபுரம் ஆற்றங்கரை மயான சுடலைமாடசாமி கோவிலில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மேலும் பீதி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story