முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின கடைகள் மூடல்; வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்


முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின கடைகள் மூடல்; வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 2 Aug 2020 10:45 PM GMT (Updated: 2 Aug 2020 5:06 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால், தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வீடுகளுக்குள் பொதுமக்கள் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கோவில்பட்டி,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோன்று தற்போது இந்த மாத ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி நேற்று மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன.

முழு ஊரடங்கால் கோவில்பட்டியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. மளிகை கடைகள், இறைச்சி கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மருந்து கடைகள், பால் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களும் ஓடவில்லை. இதனால் கோவில்பட்டி மெயின் ரோடு, எட்டயபுரம் ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெறிச்சோடியது.

கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக சாலைகளில் சுற்றி திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

இதேபோன்று திருச்செந்தூர் மெயின் ரோடு, ரத வீதிகள் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடிக் கிடந்தன. காந்தி தினசரி மார்க்கெட் திறக்கப்படவில்லை. ஒரு சில மருந்து கடைகள், பால் கடைகள் திறக்கப்பட்டன. ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏரல் மெயின் பஜார், காந்தி சிலை பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் மருந்து கடைகள், பால் கடைளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடிக் கிடந்தன. இதேபோல காயல்பட்டினம் மெயின் ரோடு, ஆறுமுகநேரி பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் அனைத்து கடைகளும் திறக்கப்படாததால் வெறிச்சோடியது.

கயத்தாறு மெயின் ரோடு, பழைய பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் அனைத்து கடைகளும் மூடிக் கிடந்தன. மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், விளாத்திகுளம், கழுகுமலை, ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, நாசரேத், சாத்தான்குளம், உடன்குடி உள்ளிட்ட பகுதிளிலும் மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடிக் கிடந்தன.

அத்தியாவசிய தேவைகளுக்கு மாறாக வெளியில் வாகனங்களில் சுற்றி திரிந்தவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி, வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர்.

Next Story