நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை


நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை
x
தினத்தந்தி 2 Aug 2020 9:30 PM GMT (Updated: 2 Aug 2020 6:51 PM GMT)

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, அம்பை, நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 58 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் ஒரு அடி உயர்ந்து 59.40 அடியாக உள்ளது. இந்த அணைக்கு தற்போது வினாடிக்கு 881 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 454 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 72.97 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 62.25 அடியாக இருக்கிறது. இந்த அணைக்கு வினாடிக்கு 18 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 55 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல் தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், செங்கோட்டை ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- பாபநாசம் 7, சேர்வலாறு 1, மணிமுத்தாறு 3.2, அம்பை 3.60, பாளையங்கோட்டை 2.20, நெல்லை 1, சேரன்மாதேவி 1.20, கருப்பாநதி 1, அடவிநயினார் 14, செங்கோட்டை 5.

Next Story