ஜம்முகாஷ்மீரில் பலியான எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் தகனம் - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நடைபெற்றது
ஜம்முகாஷ்மீரில் பலியான நீடாமங்கலத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நீடாமங்கலம்,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள புள்ளவராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல். இவருடைய மகன் திருமூர்த்தி (வயது47). எல்லை பாதுகாப்பு படையில் 1990-ம் ஆண்டு பணியில் சேர்ந்த திருமூர்த்தி 173-வது படைப் பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் (ஜூலை) 26-ந் தேதி ஜம்முகாஷ்மீரில் எல்லை பகுதியில் அவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென துப்பாக்கி குண்டு வெடித்ததில் படுகாயம் அடைந்தார். உத்தம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமூர்த்தி கடந்த 31-ந் தேதி பரிதாபமாக இறந்தார். திருமூர்த்தியின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
பின்னர் சென்னையில் இருந்து எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்பஜன்தரி தலைமையில் வீரர்கள் எல்லை பாதுகாப்பு அலுவலக வாகனம் மூலம் திருமூர்த்தி உடலை அவரது சொந்த ஊரான புள்ளவராயன்குடிகாடு கிராமத்துக்கு கொண்டு வந்தனர்.
அப்போது திருமூர்த்தியின் மனைவி தமிழரசி, மகள் அகல்யா, மகன் அகத்தியன் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் திருமூர்த்தியின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ், மாவட்ட கலெக்டர் ஆனந்த், போலீஸ் சூப்பிரண்டு துரை ஆகியோர் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர்கள் நீடாமங்கலம் வக்கீல் சோம.செந்தமிழ்ச்செல்வன், மன்னார்குடி சேரன்குளம் மனோகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். திருமூர்த்தியின் உடலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுமந்து அலங்கரிக்கப்பட்ட எல்லைபாதுகாப்பு படை வாகனத்தில் வைத்தனர்.
வீட்டில் இருந்து புறப்பட்ட அந்த வாகனம் மயானத்தை அடைந்ததும், திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளர் லூர்துவிஜய்பிரவீன் தலைமையில் போலீஸ் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் திருமூர்த்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக திருமூர்த்தியின் இறுதிச்சடங்கிற்காக எல்லை பாதுகாப்பு படை சார்பில் ரூ.33 ஆயிரத்தை அவரது மனைவி தமிழரசியிடம் அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
Related Tags :
Next Story