உதவி கலெக்டர் அலுவலகத்தில் தூக்குப்போட்டு ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை
பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தீபன்ராஜ் (வயது38). இவர் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், 4 வயதில் ஆண் குழந்தையும், 5 மாத பெண் குழந்தையும் உள்ளனர். தீபன்ராஜ் பட்டுக்கோட்டை கரிக்காடு தெருவில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு உதவி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் வழக்கம்போல் பணி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட்டனர்.
பின்னர் அலுவலக பணியாளர் முகுந்தன் என்பவர் அலுவலகத்தின் அறைகளை பார்வையிட சென்றார். அப்போது மாடிக்கு சென்றபோது அங்கு அலுவலக கூட்ட அரங்கில் உள்ள மின்விசிறியில் தீபன்ராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகுந்தன் அலறி அடித்தபடி ஓடிச்சென்று அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர போலீசார் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு விரைந்து சென்று தீபன்ராஜ் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறு காரணமாக தீபன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர் தற்கொலை செய்து கொண்டது பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story