கோவை மாவட்டத்தில், நர்ஸ் உள்பட 167 பேருக்கு தொற்று உறுதி - கொரோனாவுக்கு 2 பேர் பலி


கோவை மாவட்டத்தில், நர்ஸ் உள்பட 167 பேருக்கு தொற்று உறுதி - கொரோனாவுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 3 Aug 2020 4:00 AM IST (Updated: 3 Aug 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் நர்ஸ் உள்பட 167 பேருக்கு கொரோனா உறுதியானது. 2 பேர் பலியானார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் 37 வயது நர்சுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. இதுதவிர கோவை டாடாபாத் 6-வது வீதியில் 23 வயது பெண், பீளமேடு ஏ.டி. காலனியை சேர்ந்த 34 வயது பெண் மற்றும் அவரது 9 வயது மகள், கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த 3 வயது குழந்தை, காரமடை கண்ணம்மபாளையத்தை சேர்ந்த 29 வயது பெண் அவரது 6 வயது மகள், புலியகுளம் சவுரிபாளையத்தை சேர்ந்த 38, 40 வயது ஆண், 32 வயது பெண் உள்பட கோவை மாவட்டத்தில் நேற்று 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 230 ஆக அதிகரித்தது.

கோவையில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா கண்காணிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 224 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்கள். அதன்படி இதுவரை மொத்தம் 3 ஆயிரத்து 456 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை டவுன்ஹால் வைசியாள் வீதியை சேர்ந்த 60 வயது முதியவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. அவர் கடந்த மாதம் 29- ந் தேதி சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதியானது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென உயிரிழந்தார். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு பலியாணவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்தது.

அதேபோல் திருப்பூர் கருவம்பாளையம் ஐ.என்.நகரை சேர்ந்த 37 வயது ஆண் ஒருவர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த 29-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா உறுதியானது. அவர், நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். வெளிமாவட்டம் என்பதால், அவருடைய உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. கோவையில் பாதுகாப்பாக தகனம் செய்யப்பட்டது.

Next Story