கடலூரில் தொடர்ந்து பதற்றம்: மீனவரை வெட்டிக்கொன்ற 5 பேர் கைது- ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் உள்பட 12 பேருக்கு வலைவீச்சு
கடலூரில் மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவான ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் உள்பட 12 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்,
கடலூரை அடுத்த தாழங்குடா மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாசிலாமணி(வயது 42). குண்டுஉப்பலவாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் குண்டுஉப்பலவாடி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மாசிலாமணி மனைவி பிரவினாவும், அதே கிராமத்தை சேர்ந்த மதியழகன் மனைவி சாந்தியும் போட்டியிட்டனர். இதில் சாந்தி வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவரானார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சமீபத்தில் 10-வது வார்டில் கிருமி நாசினி தெளிக்கும் போது மாசிலாமணிக்கும், மதியழகனுக்கும் தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது. இதில் ஆத்திரமடைந்த மதியழகன், அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து மாசிலாமணி, அவரது தம்பி மீனவரான மதிவாணன்(வயது 36) ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இது குறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் மதிவாணன், தனது மோட்டார் சைக்கிளில் கண்டக்காட்டில் இருந்து தாழங்குடா நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது 15-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள், இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து மதிவாணனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இது பற்றி அறிந்ததும் ஒரு கும்பல் மதியழகன் தரப்பை சேர்ந்த வீடுகளை சூறையாடியது. மேலும் கார்கள், மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். சிலவற்றை தீ வைத்து கொளுத்தி எரித்தனர். மேலும் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த 25-க்கும் மேற்பட்ட படகுகள், மீன் பிடி வலைகளையும் தீ வைத்து எரித்தனர்.
இந்த சம்பவத்தால் தாழங்குடா மீனவ கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதையொட்டி அங்கு காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 620 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.எழிலரசன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் அதிகாரிகள் அந்த கிராமத்திலேயே விடிய, விடிய முகாமிட்டிருந்தனர். கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து மாசிலாமணி தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிவாணனை கொலை செய்ததாக தாழங்குடாவை சேர்ந்த தங்கதுரை மகன் முகிலன்(38), நாகமுத்து மகன் சிவசங்கர் (36), ஆறுமுகம் மகன் அரசகுமார் (30), ஜெயராமன் மகன் வீரசந்திரன் (55), காலப்பன் மகன் மதன் (38) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மதியழகன், பழனிவேல், வேணு, சிவபாலன், தினகரன், தங்கதுரை, சூர்யா, கந்தன், பாவாணன், கதிரவன், அகிலன், இளவரசன் ஆகிய 12 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story