படகுகளுக்கு தீ வைத்து, வீடுகளை சூறையாடிய 19 பேர் கைது
கடலூர் அருகே படகுகளுக்கு தீ வைத்து, வீடுகளை சூறையாடிய 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் அருகே உள்ள தாழங்குடா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மதியழகன் என்பவருக்கும் இடையே தேர்தல் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற மாசிலாமணியின் தம்பி மதிவாணனை, 17 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தது.
இதைக் கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்த மாசிலாமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாழங்குடா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25 பைபர் படகுகளை தீ வைத்து எரித்தனர். மீன்பிடி வலைகள் மற்றும் ஒரு சுருக்குமடி வலைகளையும் சேதப்படுத்தினர். 4 வீடுகளை சூறையாடியதோடு, வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கார்கள், 12 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். இதன் மொத்த சேத மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது.
மேலும் தாழங்குடா வேல்டுவிஷன் தெருவை சேர்ந்த நாகமுத்து மனைவி ராதா(50) என்பவரின் வீட்டுக்குள் புகுந்த கும்பல், ராதாவை மிரட்டி வீட்டில் இருந்த 2 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் திருடிச்சென்றதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் தொடர்பாக தாழங்குடாவை சேர்ந்த குப்புராஜ் மகன் குருநாதன், கன்னியப்பன் மகன் சிவக்குமார், பாவாடைசாமி மகன் பிச்சை, மாரியப்பன் மகன் மணிமாறன், ராமன் மகன் தினேஷ், மணிமாறன் மகன் மதி, அங்கப்பன் மகன் வனசேகர், காளியப்பன் மகன் நவீன்ராஜ், தங்கவேல் மகன் சூரியமூர்த்தி, கனகராஜ் மகன் கலைச்செல்வன், ராஜ் மகன் அருண்குமார், மணிமாறன் மகன் மகேந்திரன், விநாயகமூர்த்தி மகன் கமல், அங்கப்பன் மகன் மாரி, பெருமாள் மகன் தீனதயாளன், கிருஷ்ணராஜ் மகன் சுதர்சன், மாரியப்பன் மகன் புகழரசன், சக்திவேல் மகன் அஜித்குமார், மாரியப்பன் மகன் ஜான்சன் ஆகிய 19 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி, இவரது தம்பி மகாதேவன் உள்பட 6 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story