போளூர் அருகே, ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு - மீன்பிடிக்க சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்
போளூர் அருகே ஏரியில் மீன்பிடிக்க சென்ற தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
போளூர்,
போளூரை அடுத்த களம்பூர் அருகே உள்ள ஜம்புகோனாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 35), தொழிலாளி. இவர், தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் மொடையூர் ஏரியில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது தேவதாஸ் திடீரென தண்ணீரில் மூழ்கினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் போளூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்குமார், துணை தாசில்தார் மஞ்சுளா, இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை ஆகியோர் விரைந்து சென்றனர்.
அதைத் தொடர்ந்து சேத்துப்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் சிவநேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, படகு உதவியுடன் ஏரியில் தேடினர். இரவு வெகு நேரமானதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
பின்னர் நேற்று காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கியது. பகல் 12 மணி அளவில் சேற்றில் சிக்கி இருந்த தேவதாசின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இதனையடுத்து போளூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியில் மூழ்கி இறந்த தேவதாசுக்கு மனைவியும், 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Related Tags :
Next Story