பாலக்கோடு அருகே வாலிபர் கொலை: மாமனார் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை
பாலக்கோடு அருகே வாலிபர் கொலை தொடர்பாக மாமனார் உள்பட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பாலக்கோடு,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி ஒட்டர் திண்ணை பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவருடைய மகன் விஜய் (வயது 24). இவர் பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் பிக்கனஅள்ளி பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (22) என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண்ணின் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதனிடையே ராஜேஸ்வரி திருமணமான சில நாட்களில் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் ஊருக்கு வந்த விஜய் மாமனார் வீட்டுக்கு சென்று வருவதாக மோட்டார் சைக்கிளில் பிக்கனஅள்ளிக்கு சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் பாலக்கோடு அருகே உள்ள பாரூரான்கொட்டாய் என்ற இடத்தில் விஜய் கொலை செய்யப்பட்டு உடலில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் நடத்திய விசாரணையில், வாலிபர் விஜயை அவருடைய மாமனார் முனிராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு சொந்த ஊருக்கு வந்து விடுமாறும், இங்கு வேறு தொழில் செய்து கொள்ளலாம் என்றும் அழைத்துள்ளார். இதையடுத்து விஜய் மாமனார் வீட்டுக்கு வந்தபோது வழியில் அடித்துக்கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து முனிராஜ் உள்பட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story