கொரோனா முழு ஊரடங்கால்: ஒகேனக்கல், மேட்டூரில் களை இழந்த ஆடிப்பெருக்கு


கொரோனா முழு ஊரடங்கால்: ஒகேனக்கல், மேட்டூரில் களை இழந்த ஆடிப்பெருக்கு
x
தினத்தந்தி 3 Aug 2020 4:00 AM IST (Updated: 3 Aug 2020 9:50 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா முழு ஊரடங்கால் ஒகேனக்கல், மேட்டூர் காவிரி ஆறுகளில் பக்தர்கள் கூட்டமின்றி ஆடிப்பெருக்கு விழா நேற்று களை இழந்தது.

மேட்டூர், 

தமிழகத்தில் காவிரி நுழையும் மாவட்டமான தர்மபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின்போது காவிரி ஆற்றங்கரையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து புனித நீராடுவார்கள். பின்னர் அந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 4 மாதங்களாக 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. குறிப்பாக ஆடிப்பெருக்கு நாளான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டங்கள் களை இழந்தன.

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காவிரி ஆற்றங்கரையில் திரளுவார்கள். குறிப்பாக புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றங்கரையில் புனித நீராடி அங்குள்ள காவேரியம்மன் சமேத தேசநாதேஸ்வரர் கோவிலில் தாலி கயிற்றை மாற்றி வழிபடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முழு ஊரடங்கு காரணமாக ஆடிப்பெருக்கு விழாவிற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லுக்கு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அங்குள்ள ஆற்றங்கரையோர பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. இதேபோல் ஒகேனக்கல்லில் உள்ள சாலைகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. போலீசார் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதே போல மேட்டூரிலும் ஆடிப்பெருக்கு விழா களை கட்டுவது வழக்கம். குறிப்பாக சேலம், தர்மபுரி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேட்டூருக்கு வந்து, காவிரி ஆற்றில் புனித நீராடி, அணைக்கட்டு முனியப்பன் கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்வர். ஒரு சிலர் ஆடு, கோழி ஆகியவற்றை முனியப்பனுக்கு பலியிட்டு, பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பின்னர் தாங்கள் சமைத்த உணவை மேட்டூர் பூங்காவுக்கு எடுத்து சென்று நண்பர்கள் உள்பட உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்வது வழக்கம்.

இதனால் மேட்டூர் காவிரி பாலம் முனியப்பன் கோவில், மேட்டூர் பூங்கா, பஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

இதுமட்டுமின்றி ஆடிப்பெருக்கையொட்டி நேற்று காவிரி ஆற்றில் யாரும் நீராடக்கூடாது என்று சேலம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் நேற்று மேட்டூரில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது. அதே நேரத்தில் பொதுமக்கள் வருகையை கண்காணிக்க மேட்டூர் காவிரி ஆற்றங்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் மக்கள் கூட்டமாக காணப்படும் மேட்டூர் காவிரி ஆற்றங்கரை படித்துறை, காவிரி பாலம், பூங்கா, முனியப்பன் கோவில் ஆகிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று மேட்டூர் பூங்காவுக்கு 28 ஆயிரத்து 256 பேர் வந்திருந்தினர். இதன் மூலம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 155 வசூலாகி இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் களை இழந்தது பொதுமக்களிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Next Story